டொக்டர் ஷாபி மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களில்லை

குருநாகல் நீதிமன்றில் சி.ஐ.டி அறிவிப்பு
210 பக்க அறிக்ைக சமர்ப்பிப்பு

வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்க இது வரை எந்தவித ஆதாரமுமில்லையென குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்று குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.

வைத்தியர் ஷாபிக்கு எதிரான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது 210 பக்கங்களைக் கொண்ட அறிக்கையொன்றை சி.ஐ.டி உதவி பொலிஸ் அத்தியட்சகர் திசேரா சமர்ப்பித்தார்.

அவரின் சொத்து விபரங்களைப் பரீட்சித்ததாகவும் அவருக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்புடனோ தௌஹீத் அமைப்புடனோ தொடர்பு கிடையாது எனவும் கருத்தடை குற்றச்சாட்டு முன்வைத்த பெண்களில் அநேகமானவர்களின் முறைப்பாடுகள் ஏற்கமுடியாதவை எனவும் சி.ஐ.டி நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

டொக்டர் சாபிக்கு எதிரான வழக்கு விசாரணை குருணாகல் நீதவான் சம்பத் காரியவசம் முன்னிலையில் நேற்று இடம்பெற்றது.

கருத்தடை குற்றச்சாட்டு முன்வைத்த பெண்கள்,மருத்துவர்கள்,மகப்பேற்று நிபுணத்துவ மருத்துவர்கள்,தாதிமார் உட்பட 400 பேரிடம் வாக்கு மூலம் பதியப்பட்டதாக 210 பக்க அறிக்கையை முன்வைத்த சி.ஐ.டியினர் நீதிமன்றத்தில் அறிவித்தார்கள். மருத்துவர் ஷாபியினால் மாத்திரம் தனியாகக் கருத்தடை சத்திர சிகிச்சை செய்ய முடியாது என மருத்துவர்கள் தமது சாட்சியத்தில் குறிப்பிட்டதாகவும் சி.ஐ.டி தெரிவித்துள்ளது.இது வரை 3479 சிங்கள பெண்கள்,870 தமிழ் பெண்கள் மற்றும் 33 முஸ்லிம் பெண்களுக்கு டொக்டர் ஷாபி சிசேரியன் சத்திர சிகிச்சை செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பெண்களிடம் வாக்குமூலம் பெறும் போது சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம் பெண்களிடம் வாக்குமூலம் பெறப்படவில்லை என எதிர்த்தரப்பு சட்டத்தரணிகள் சிலர் வினா எழுப்பினார்கள்.இதற்குப் பதிலளித்த சி.ஐ.டியினர் தங்களுக்கு கிடைத்த முறைப்பாடுகளின் பிரகாரமே வாக்குமூலங்கள் பதிந்தாகத் தெரிவித்தனர்.ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் கருத்தடை சத்திரசிகிச்சை தொடர்பில் முறையிட்டதாக ஊடகங்களில் கூறப்பட்டாலும் சி.ஐ.டிக்கு சுமார் 600 முறைப்பாடுளே கிடைத்ததாக கூறிய அவர்கள், அதில் 11 பெண்கள் தொடர்பில் விசாரணை நடத்த தெரிவு செய்ததாகக் கூறினார்கள். அதிலும் 2 பேரின் முறைப்பாடுகளே விசாரணை செய்யும் மட்டத்தில் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், டொக்டர் ஷாபி மீது வீண் பலி சுமத்தப்பட்டதாகவும் அவரை பிணையில் விடுவிக்குமாறும் கோரினார். அவர் தவறான வழியில் சொத்து சேர்க்கவில்லை என்று கூறிய அவர்,கருத்தடை செய்ததாக வதந்தி பரப்பி இனமுரண்பாட்டை பரப்ப சில தரப்பினர் முயன்றதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, டொக்டர் ஷாபிக்கு பிணை வழங்க நீதவான் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறிய நீதவான், விசாரணை தொடர்பான முழு அறிக்கையொன்றை இரு வாரங்களில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணையை முன்னிட்டு பெருந்திரளான மக்கள் நீதிமன்றத்திற்கு முன்பாக திரண்டிருந்தார்கள். அதுரலியே ரதன தேரரும் அங்கு வருகை தந்திருந்தார்.

4000 சிங்கள தாய்மார்களை சிசேரியன் சத்திர சிகிச்சையின் போது கருத்தடை செய்ததாக குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டது தெரிந்ததே.(பா)

வாரியபொல தினகரன் நிருபர்

Fri, 06/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை