நாட்டுக்கும் கட்சிக்கும் புதிய தலைமைத்துவம் அவசியம்

ஜனாதிபதித் தேர்தலில் தொண்டர்களால் தெரிவாகும் ஒருவரையே நிறுத்துவோம் 

நாட்டுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் புதிய தலைமைத்துவமொன்று கட்டாயம் அவசியமாகியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் அதிசிறந்த வெற்றியை பெற்றுக்கொள்ளும் தலைவரையே நாங்கள் வேட்பாளராக நிறுத்தவுள்ளோமென்று டிஜிற்றல் உட்கட்டமைப்பு மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

தற்போதைய தலைமைத்துவத்தில் பிரச்சினைகள் ஏதும் இல்லை. ஆனால், இதனையும் விட

வீரியத்துடன் முன்னோக்கிப் பயணிக்கும் கொள்கைகளுடன் கூடிய தலைமைத்துவத்தையே நாங்கள் எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் கூறினார்.

டிஜிற்றல் உட்கட்டமைப்பு மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐ.தே.கவுக்கு 25 வருடங்களுக்கும் அதிகமாக தலைமைத்துவத்தை வழங்கியுள்ளார். அவர் நாட்டுக்கும் கட்சிக்கும் பாரிய சேவையை செய்துள்ளார்.

என்றாலும், இத்தருணத்தில் கட்சிக்கு புதிய தலைமைத்துவமொன்றின் அவசியம் எழுந்துள்ளது. கட்சியின் பாராளுமன்ற குழுவும், மத்திய செயற்குழுவும் இதனைத் தீர்மானிக்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி வேட்பாளர் ஒருவர் எமக்கு அவசியம். தலைவர்களால் அல்லாது தொண்டர்களால் தெரிவுசெய்யும் தலைவர் ஒருவர் எமக்கு அவசியமாகவுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எவர் போட்டியிட்டாலும், ஊழல் - மோசடிகளற்ற, அரசியலமைப்புக்கு மதிப்பளித்து நாட்டினதும் நாட்டு மக்களினதும் எதிர்காலம் குறித்து சிந்திக்கும் தலைவரையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நாட்டுக்கு புதிய தலைமைத்துவமே அவசியமாகவுள்ளது. இளைய துடிப்புடன் கூடிய தலைமை அவசியம். நாட்டின் ஜனநாயகத்தை மதிக்கின்ற, மனித படுகொலைகள் செய்யாத, ஏழைகளை அரவணைக்கும் தலைவரே அவசியமாகவுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைதான் இந்நாட்டில் இன்னமும் உள்ளது. 19ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் நிறைவேற்று அதிகாரத்தில் பாரிய மாற்றம் ஏதும் நிகழவில்லை. பரந்துப்பட்ட அதிகாரங்கள் நிறைவேற்று அதிகாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளன என்றார்.

 

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Sat, 06/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை