தவானின் சதத்துடன் இந்திய அணி வெற்றி

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கிண்ண லீக் போட்டியில் இமாலய ஓட்டங்களை பெற்ற இந்திய அணி 36 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் தனது புள்ளிகளை நான்காக அதிகரித்துக் கொண்ட இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டது. இதனால் மூன்றாவது இடத்தில் இருந்த அவுஸ்திரேலிய அணி நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டதோடு இலங்கை அணி ஐந்தாவது இடத்திற்கு சரிந்தது.

லண்டன், கிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆரம்பம் தொட்ட சிறப்பாக செயற்பட்டது. ஆரம்ப வீரர்களான ஷிகர் தவான் மற்றும் ரோஹித் ஷர்மா 127 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.

இதில் ஷர்மா 57 ஓட்டங்களில் ஆட்டமிழந்தபோதும் தவான் சதம் பெற்றார். 109 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 117

ஓட்டங்களை பெற்றார். தொடர்ந்து வந்த அணித்தலைவர் விராட் கொஹ்லியும் சிறப்பாக ஆடி 77 பந்துகளில் 82 ஓட்டங்களை குவித்தார். மத்திய வரிசையில் அதிரடியாக ஆடிய பாண்டியா 27 பந்துகளில் 48 ஓட்டங்களை விளாசினார்.

இதன்மூலம் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 352 ஓட்டங்களைப் பெற்றது.

இந்நிலையில் உலகக் கிண்ண வரலாற்றில் இதுவரை எந்த அணியும் எட்டாத இலக்காக 353 ஓட்ட வெற்றி இலக்குடன் பதிலெடுத்தாட களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை காத்துக்கொண்டு நிதானமாக ஆடியதால் அந்த அணி கடைசி நேரத்தில் குறைந்த பந்துகளுக்கு அதிக ஓட்டங்களை பெற வேண்டி ஏற்பட்டது. இதனால் 202 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை மாத்தரமே இழந்திருந்த அந்த அணி வேகமாக துடுப்பெடுத்தாட முயன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்தது.

இதனால் 50 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்த அவுஸ்திரேலிய அணி 316 ஓட்டங்களையே பெற்றது. முன்னாள் அணித்தலைவர் ஸ்டிவ் ஸ்மித் 70 பந்துகளில் 69 ஓட்டங்களைப் பெற்றதோடு டேவிட் வோர்னர் 84 பந்துகளில் 54 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

அலக்ஸ் கரி 34 பந்துகளுக்கு 55 ஓட்டங்களைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி சார்பில் புவனேஷ்வர் குமார் மற்றும் ஜெஸ்ப்ரிட் பூம்ரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சதம் பெற்ற தவானுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.

Mon, 06/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை