கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது

​ஜே.வி.பி குற்றச்சாட்டு

இந்தியாவில் மத்திய அரசாங்கம் ஒன்று இல்லாத நிலையிலேயே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறை முனையம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருப்பதாக ஜே.வி.பி குற்றஞ்சாட்டியுள்ளது.

துறைமுக அதிகாரசபையிடம் இருந்த ஒரேயொரு முனையமான கிழக்கு முனையத்தையும் இலங்கை அரசாங்கம் இந்தியாவின் அழுத்தத்துக்கு அடிபணிந்து, கப்பமாக வழங்கியிருப்பதாக ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார். ஜே.வி.பி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்

சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையத்தை சீனாவுக்கு கப்பமாக வழங்கும்போது கிழக்கு முனையத்தை தமக்கு வழங்குமாறு இந்தியா மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்திடம் கோரியிருந்தது.

இவ்வாறான நிலையில் 2015ஆம் ஆண்டு முதல் இந்த விடயத்தில் இந்தியா அழுத்தம் கொடுத்து வந்தது.

துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமாகவிருந்த ஒரேயொரு முனையத்தை வெளிநாட்டுக்கு விற்பதிலேயே அரசாங்கமும் குறியாகவிருந்தது.

இதனாலேயே 6 மில்லியன் ரூபா செலவில் இங்கு பாரந்தூக்கிகளை அமைப்பதற்கு துறைமுக அதிகாரசபை கோரியபோதும் அரசாங்கம் அனுமதிவழங்கவில்லை.

இவ்வாறான நிலையில் இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெற்று மத்தியில் அரசாங்கம் இல்லாத சூழ்நிலையில் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கியுள்ளனர். இதனை இந்தியாவுக்கு வழங்கியமையால் பாரிய பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால் துறைமுக அதிகாரசபைக்கு ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்க முடியாதுபோகும்.

இதன் காரணமாக பலர் வேலைகளை இழக்கவேண்டிவரும்.

எனவே துறைமுக ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து இதற்கு எதிராகப் போராட முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மகேஸ்வரன் பிரசாத்

Mon, 06/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை