அமெரிக்க ஆளில்லா உளவு விமானத்தை வீழ்த்தியது ஈரான்

ஹார்முஸ் நீரிணைக்கு மேலால் பறந்துகொண்டிருந்த அமெரிக்க ஆளில்லா உளவு விமானம் ஒன்றை ஈரான் இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.

அந்த ஆளில்லா விமானம் ஈரானிய வான் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக ஈரானிய புரட்சிக் காவல் படை குறிப்பிட்டுள்ளது. எனினும் அது சர்வதேச கடலுக்கு மேலாலேயே பறந்ததாக அமெரிக்க விளக்கியுள்ளது.

ஈரானிய எல்லை என்பது அமெரிக்காவின் ‘சிப்புக் கோடு’ என்ற தெளிவான செய்தியை சுட்டு வீழ்த்தப்பட்ட இந்த ஆளில்லா விமானம் மூலம் தருவதாக ஈரான் புரட்சிக் காவல் படையின் தலைமை மேஜர் ஜெனரல் ஹுஸைன் சலமி எச்சரித்துள்ளார்.

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் பதற்றம் அதிகரித்திருக்கும் சூழலிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஈரானின் விரோத நடத்தைக்கு பதில் நடவடிக்கையாக பிராந்தியத்திற்கு 1,000 மேலதிக துருப்புகளை அனுப்புவதாக அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்திருந்தது.

ஹார்முஸ் நீர்ணைக்கு நெருக்கமான தூரத்தில் ஓமான் வளைகுமாவில் கடந்த வாரம் இரு எண்ணெய் கப்பல்கள் மீது இடம்பெற்ற தாக்குதல்களுக்கும் ஈரான் மீது அமெரிக்கா குற்றம்சாட்டியது. ஈரான் அதனை மறுத்துள்ளது.

அதிக எண்ணெய்க் கப்பல்கள் பயணிக்கும் இந்த பிராந்தியத்தில் ஒரு மாதத்தில் எண்ணெய் கப்பல்கள் மீது இடம்பெற்ற இரண்டாவது தாக்குதலாக அது இருந்தது.

ஈரான் தனது கையிருப்பில் இருக்கும் யுரேனிய செறிவூட்டலுக்கான கட்டுப்பாட்டை அடுத்த வாரம் தொடக்கம் தளர்த்தி அதனை அதிகரிக்கப்போவதாக கடந்த திங்களன்று ஈரான் அறிவித்தது இரு தரப்புக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரிப்பதாக இருந்தது.

தெற்கு மாகாணமான ஹோர்மோஸ்கானில் கொபராக்கிற்கு அருகில் ஈரானிய வான் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த ஆளில்லா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதாக ஈரான் ஆரம்பத்தில் அறிவித்தது. தொடர்ந்து ஈரான் ஆட்புல இறைமை மற்றும் தேசிய பாதுகாப்பை அமெரிக்க மதிக்க வேண்டும் என்று ஈரான் அரச தொலைக்காட்சியில் உரையாற்றிய ஜெனரல் சலமி எச்சரித்தார்.

இதற்கு அமெரிக்கா தரப்பில், தங்களது ஆளில்லா விமானம் ஒன்று சுடப்பட்டதாகவும் அது சர்வதேச வான்வெளிப் பாதையிலேயே பறந்ததாகவும் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது எம்.கியு–9 ரீபர் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டுவீழ்த்த முயன்றதாக அமெரிக்கா கடந்த வாரம் குற்றம்சாட்டி இருந்தது. கடந்த வாரம் தாக்குதலுக்கு இலக்கான எண்ணெய் கப்பல் ஒன்றை கண்காணிக்க முயன்றபோது நிலத்தில் இருந்து வானை தாக்கும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்த முயன்றதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது.

எனினும் அந்த ஆளில்லா விமானம் முன்னதாக தாக்குதலுக்கு இலக்கான மற்றொரு எண்ணெய் கப்பலான பிரொன்ட் அல்டயார்ஸ் கப்பலை கண்காணித்திருந்தது.

அதற்கு முந்திய வாரத்தில் அமெரிக்காவின் எம்.கியு–9 ரீபர் ஆளில்லா விமானம் யெமன் வானுக்கு மேலால் சுட்டுவீழ்த்தப்பட்டது. ஈரான் ஆதரவு ஹுத்திக் கிளர்ச்சியாளர்களே நிலத்தில் இருந்து வானைத் தாக்கும் ஏவுகணை கொண்டு அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தி இருந்தனர்.

ஹுத்திக்களின் தாக்குதல் எல்லை அதிகரித்திருப்பதாகவும் ஈரானின் உதவி இன்றி கிளர்ச்சியாளர்களால் அந்தத் தொழில்நுட்பத்தைப் பெற முடியாது என்றும் அமெரிக்கா குற்றம்சாட்டியது.

2011 இல் அமெரிக்காவின் ஆர்.கியு–170 ஆளில்லா விமானத்தை கைப்பற்றியதாக ஈரான் அறிவித்திருந்தது. அந்த விமானம் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் காணாமல்போனதாக அமெரிக்கா குறிப்பிட்டது.

அந்த ஆளில்லா விமானத்தைக் கொண்டு ஈரான் சொந்தாக ஆளில்லா விமானத்தை தயாரித்தது. அவ்வாறான ஈரானிய விமானம் ஒன்றை கடந்த ஆண்டு இஸ்ரேல் சுட்டு வீழ்த்தியது.

Fri, 06/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை