இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நிலத்தில் டிரம்பின் பெயரில் புதிய குடியேற்றம்

ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்று பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பெயரில் இஸ்ரேல் புதிய குடியேற்றம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

இந்த நிலப்பகுதியில் இஸ்ரேலின் இறைமையை அங்கீகரித்ததை கெளரவிக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதியின் பெயர் சூட்டப்பட்டதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பெயர் சூட்டும் நிகழ்வொன்றில் உரையாற்றும்போது இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தெரிவித்தார்.

இதன்படி புதிய குறியேற்றத்திற்கு ‘டிரம்ப் ஹைட்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இங்கு நிர்மாணப் பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படாத நிலையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கொடிகளுடன் புதிய பெயர்ச் சுவர் திறந்து வைக்கப்பட்டது.

எனினும் சட்ட அனுமதி இல்லாத நிலையில் இது புகழ் சேர்ப்பதற்கான முயற்சி என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

1967 மத்திய கிழக்கு யுத்தத்தின்போதே சிரியாவிடம் இருந்து கோலன் குன்றை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. 1981 இல் இந்தப் பகுதியை இஸ்ரேல் தனது ஆட்புலத்திற்குள் இணைத்துக்கொண்டபோதும் அதனை சர்வதேசம் அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில் உலகின் முதல் நாடாக கடந்த மார்ச் மாதம் கோலன் குன்றில் இஸ்ரேலின் இறைமையை அமெரிக்கா அங்கீகரித்தது. “இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள்” என்று குறிப்பிட்ட நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதியை “இஸ்ரேலின் நண்பன்” என்று பாராட்டினார். இந்த நிகழ்வில் பங்கேற்ற இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதுவர் டேவிட் பிரிட்மன், இந்தக் குடியேற்றம் தகுதியுடையது என்றார்.

அமெரிக்காவின் பல தசாப்தகால கொள்கைளை மாற்றி கோலன் குன்றில் இஸ்ரேலின் இறைமையை டொனால்ட் டிரம்ப் அங்கீகரித்ததை அடுத்து அவரின் பெயரில் குடியேற்றம் அமைப்பது குறித்த அறிவிப்பை இஸ்ரேல் பிரதமர் கடந்த ஏப்ரலில் வெளியிட்டிருந்தார்.

1,000 சதுர கிலோமீற்றர் பகுதியைக் கொண்ட இந்தப் பிராந்தியமானது சிரியத் தலைநகர் டமஸ்கஸில் இருந்து தென் மேற்காக 60 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

வடக்கு கோலன் குன்றின் கேலாவுக்கு அருகில் புதிய குடியேற்றம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

Tue, 06/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை