கிண்ணியா கின்ஸ் நெஷனல் அணி சம்பியன்

திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் வாரியத்தால் (TDCA) நடாத்தப்பட்ட ரி 20 கிரிக்கெட் போட்டித் தொடரின் வெற்றிக் கிண்ணத்தை கிண்ணியா கின்ஸ் நெஷனல் அணி ( KINS NATIONAL) கைப்பற்றி

2019 ஆம் ஆண்டுக்கான சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் போட்டித் தொடர் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்தது. இறுதிப் போட்டி கடந்த (29) திருகோணமலை இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

18 கிரிக்கெட் அணிகள் பங்குபற்றிய இந்த போட்டித் தொடரின் முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் கிண்ணியா கின்ஸ் நெஷனல் (Kinniya Kins National) அணியும் திருகோணமலை நோர்மன்ஸ் (Trincomalee Normands) அணியும் மோதிக் கொண்டன.

இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கிண்ணியா கின்ஸ் நெஷனல் அணி, முதலில் துடுப்பெடுத்தாடுவதற்குத் தீர்மானித்தது. இதன்படி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து, 196 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் சியாத் குட்டி ஆட்டம் இழக்காது 39 பந்துகளைச் சந்தித்து 12 சிக்ஸர்களும் 8 நான்கு ஓட்டங்களும் அடங்கலாக 118 ஓட்டங்களைப் பெற்று தனது அபார ஆட்டத்தின் மூலம் தனது அணியை இறுதிப் போட்டிக்கு கொண்டு சென்றார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய திருகோணமலை நோர்மன்ஸ் அணி 20 ஓவர் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. இதன் மூலம்

கிண்ணியா கின்ஸ் நெஷனல் அணி 61 ஒட்டங்களால் அபார வெற்றியைப் பெற்று இறுதி ஆட்டத்துக்குள் துழைந்தது.

இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் திருகோணமலை சைமன்ஸ் (Symonds) அணியும் திருகோணமலை வேல்ஸ் (Wells) அணியும் மோதிக் கொண்டன.

இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற திருகோணமலை வேல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 186 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய திருகோணமலை சைமன்ஸ் அணியினர் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இந்த நிலையில் திருகோணமலை வேல்ஸ் அணி 45 ஓட்டங்களால் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்துக்கான தகுதியைப் பெற்றுக் கொண்டது.

இறுதி ஆட்டத்தில் விளையாடுவதற்கு கிண்ணியா கின்ஸ் நெஷனல் அணியும் திருகோணமலை வேல்ஸ் அணியும் களம் இறங்கின.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற திருகோணமலை வேல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களைக் குவித்தனர்.

169 எனும் வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய கிண்ணியா கின்ஸ் நெஷனல் அணியினர் 19.1 ஓவரில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 170 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கட்டுக்களால் வெற்றி பெற்று திருகோணமலை மாவட்ட 2019 ஆண்டுக்கான வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றிக் கொண்டனர்.

தொடரின் சிறந்த வீரராக கிண்ணியா கின்ஸ் நெஷனல் அணியின் சியாத் குட்டியும் இறுதிப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக முகமட் றிஸ்கானும் தெரிவு செய்யப்பட்டனர்.

கிண்ணியா மத்திய நிருபர்

Wed, 06/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை