ஜ. உ. சபையின் வழிகாட்டல்களை மீறி இனி எந்த முஸ்லிமும் செயற்பட முடியாது

முதலில் நாட்டின் சட்டத்தை மதிக்க வேண்டும்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டலை மீறி எதிர்காலத்தில் முஸ்லிம்கள் எவரும் இலங்கையில் செயற்படுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்களென மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

சமகால அரசியல் தொடர்பாக பிரதேச மக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம்  (14) வெள்ளிக்கிழமை மாலை வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் எம்.எஸ்.கே.ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றம் போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

முஸ்லிம்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டலை மீறி எதிர்காலத்தில் எந்தவித மத ரீதியான செயற்பாடுகளையும் செய்யமுடியாது அவர்களின் வழிகாட்டல்களில்தான் மத ரீதியான செயற்பாடுகள் இடம்பெறும் என்பதல் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.

இன்று இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பதனை ஒவ்வொருவரும் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். எமது ஒவ்வொரு செயற்பாட்டையும் இறைவன் கண்காணிக்கின்றான் என்பதைப்போன்று எமது செயற்பாடுகள் அனைத்தும் கண்காணிக்கப்படுகின்றன.

சட்டத்தை மதிக்கின்ற மக்களாக நாம் எப்போதும் இருக்க வேண்டும். மோட்டார் சைக்கிள் செலுத்தம் போது தலைக்கவசத்தை அணிவதற்குக்கூட நாங்கள் தயாரானவர்களாக இல்லை. அவ்வாறு இருக்காமல் இனி வரும் காலங்களில் எமது நாட்டின் சட்டத்தை முழுமையாக மதிக்கின்றவர்களாக நாம் இருக்க வேண்டும். அண்மையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சகோதரர் றவூப் ஹக்கீமிடம் உங்களது சமுகத்தை சார்ந்த மக்கள் சட்டத்தை மதிக்கின்ற மக்களல்ல, குறைந்தது தலைக்கவசத்தை அணிந்து செல்வதற்கு தயாராக இல்லை ஏன்? என்று கேள்வி கேட்ட போது சகோதரர் றவூப் ஹக்கீம் பதிலளிப்பதில் சங்கடப்பட்ட நிலையை அந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள் அவதானித்திருப்பார்கள்.

இன்று நாட்டிலே உள்ள சகோதர இன மக்கள் சட்டத்தை மதிக்காததால் எங்களை இலஞ்சம் கொடுக்கின்ற சமூகமாக பார்க்கின்றார்கள். அனாச்சாராத்திற்கு மிகவும் விலைபோனவர்களாக எங்களை பார்க்கின்றார்கள். இவைகளை வைத்து தேசியத்திலே மிகவும் மோசமாக எழுதுகின்றார்கள். வாழைச்சேனையிலே அராபிய சட்டம் என்று அண்மையில் சிங்கள பத்திரிகையிலே கட்டுரை ஒன்று வந்தது. இதனை எத்தனை பேர் வாசித்தீர்கள் என்று எனக்குத் தெரியாது.

இஸ்லாமிய மார்க்கம் அழகாக சொல்லியிருக்கின்றது. மற்றைய மதங்களை மதியுங்கள் என்றும் ஏனைய மத பெரியார்களை மதியுங்கள் என்றும். அதனை எமது பிரதேச இளைஞர்கள் கடைப்பிடித்து நடக்க வேண்டுமென்று இச்சந்தர்ப்பத்திலே கேட்டுக் கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, வாழைச்சேனை, ஓட்டமாவடி, வாகரை பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் கல்வியலாளர்கள் பள்ளிவாயல் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டதுடன் வாழைச்சேனை ஹைராத் பள்ளிவால் தலைவர் கலந்தர் பாவா பாராளுமன்ற உறுப்பிருக்கு பொண்னாடை போர்த்தி நினைவுச் சின்னமும் வழங்கினார்.

(கல்குடா தினகரன் நிருபர்)

Sun, 06/16/2019 - 13:45


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை