ஒத்துழையாமை போராட்டத்திற்கு சூடான் எதிர்ப்பாளர்கள் அழைப்பு

பல டஜன் பேர் கொல்லப்பட்ட சூடான் இராணுவ ஒடுக்குமுறையை அடுத்து தேசிய அளவில் சிவில் ஒத்துழையாமைப் போராட்டத்திற்கு அந்நாட்டு ஜனநாயக ஆதரவு அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

சிவில் அரசு ஒன்று நிறுவப்படும் வரை இந்த போராட்டத்தை தொடரவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சூடானில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து எத்தியோப்பிய பிரதமரை சந்தித்த மூன்று எதிர்த்தரப்பினர் கைது செய்யப்பட்ட நிலையிலேயே நேற்று இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது சூடானில் ஆட்சியில் உள்ள நிலைமாற்று இராணுவ கெளன்சிலின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை ஆர்ப்பாட்டத் தலைவர்கள் நிராகரித்துள்ளனர்.

சூடானின் நீண்ட காலத் தலைவரான ஒமர் அல் பஷீர் கடந்த ஏப்ரல் மாதம் இராணுவ சதிப்புரட்சி ஒன்றின் மூலம் பதவி கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து நிலைமாற்று இராணுவ கெளன்சில் அங்கு ஆட்சியில் உள்ளது. எனினும் அண்மைய உயிரிழப்புகளைத் தொடர்ந்து இந்த இராணுவ கெளசிலை நம்ப முடியாது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சிவில் அரசு ஒன்றுக்கான ஆட்சி மாற்றத்திற்கு இராணுவம் வாக்குறுதி அளித்தபோதும், கடந்த திங்கட்கிழமை தலைநகர் கார்டூமில் உள்ள ஆர்ப்பாட்ட முகாம் மீது இராணுவம் ஊடுருவியதில் பெரும் எண்ணிக்கையானவர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த இராணுவ நடவடிக்கையில் 108 பேர் கொல்லப்பட்டிருப்பதாக எதிர்ப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதில் நைல் நதியில் இருந்து குறைந்தது 40 சடலங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

சிவில் ஒத்துழையாமை போராட்டம் பற்றிய விபரம் வெளியிடப்படாத நிலையில் பல முக்கிய சேவை பணியாளர்களையும் பொலிஸார் கைது செய்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

Mon, 06/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை