தமிழகம் கோவை சுற்றிவளைப்பில் அஸாருதீன் என்பவர் கைது

பயங்கரவாதி சஹ்ரானுடன் தொடர்பு

இந்திய தேசிய புலனாய்வு அதிகாரிகள் கோவையில் 7 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியதில் சஹ்ரானுடன் நீண்டகாலமாக தொடர்பிலிருந்த முஹம்து அசாருதீன் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.மேலும் 5 பேருக்கு நீதிமன்றத்தில்

ஆஜராகுமாறும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அஸாருதீனை விசாரணை செய்ததில் அவரிடமிருந்து லெப்- டாப், டைரி, பென் டிரைவ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் ஏர் கன்னுக்கு (வான்துப்பாக்கி) பயன் படுத்தப்படும் 300 தோட்டாக்கள், 14 செல்போன்கள், 29 சிம்கார்டுகள், 10 பென் டிரைவ்கள், 3 லேப்டொப்கள், 6 மெமரி கார்டுகள், 4 ஹார்ட் டிஸ்க்குகள், ஒரு இண்டர்நெட் உபகரணம், 13 சி.டி.க்கள், டி.வி.டி.க்கள், மேலும் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் துண்டுப் பிரசுரங்கள், கையேடுகள் என்பனவும் கைப்பற்றப்பட்டன.

இலங்கையை உலுக்கிய கோரச் சம்பவத்துக்கு தேசிய தௌஹீத் ஜமாத் என்ற அமைப்பு பொறுப் பேற்றது. அந்த அமைப்புக்கு தலைவராக இருந்த சஹ்ரான் தொடர் குண்டு வெடிப்புகளின்போது தற்கொலை தீவிரவாதியாக மாறி உயிரிழந்தார்.

இதையடுத்து பயங்கரவாதியான சஹ்ரானுக்கு தமிழகத்திலிருந்து உதவிகள் கிடைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கும் அளவுக்கு தகவல்கள் கிடைத்தன. குறிப்பாக கோவையில் சிலருடன் சஹ்ரானுடன் தொடர்பில் இருந்தது பேஸ்புக் தொடர்புகள் மூலம் தெரிய வந்தது.

கோவையில் சஹ்ரானுடன் நெருக்கமாக இருப்பவர்கள் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் அனுதாபிகளாக இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. ஐ.எஸ். தீவிரவாதத்தின் கொள்கைகளை பரப்பும் வகையில் சஹ்ரான் பல தடவைகள் கோவை வந்து சென்றிருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த தகவல்களை தொடர்ந்து இந்திய தேசிய விசாரணைக் குழு கோவையிலுள்ள சிலரை ஒரு மாதமாக தீவிரமாக கண்காணித்து வந்தது. அவர்களது செல்போன், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் தொடர்புகள் அனைத்தும் மிக ரகசியமாக பின்தொடரப்பட்டன. இதன்போது கோவையிலுள்ள 6 பேர் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக இருப்பதும் ஐ.எஸ். தீவிரவாத கொள்கைகளை பேஸ்புக் மூலம் பரப்பி வருவதும் உறுதிப்படுத்தப்பட்டது.

இதற்கிடையே இந்திய தேசிய விசாரணைக் குழுவின் ஒரு பிரிவினர் கடந்த மாத இறுதியில் கொழும்புக்கு வந்து விசாரணை செய்ததில் இலங்கையிலுள்ள பயங்கரவாதிகளுக்கும் கோவை இளைஞர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இந் நிலையில் கோவையிலுள்ள இளைஞர்களை மொத்தமாக கைதுசெய்ய தேசிய விசாரணைக்குழு முடிவு செய்தது.

இதன்படி நேற்று முன்தினம் புதன்கிழமை அதிகாலை 5.30 மணி முதல் 7 இடங்களில் படைழயினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

கோவை உக்கடம் அன்பு நகரை சேர்ந்த முஹமது அசாருதீன் (32), போத்தனூர் சாலை திருமால் நகரை சேர்ந்த அக்ரம் ஜிந்தா(26), தெற்கு உக்கடம் ஷேக் இதயதுல்லா (38), குனியமுத்தூரை சேர்ந்த அபுபக்கர்(29), போத்தனூர் மெயின் ரோடு உம்மர் நகரை சேர்ந்த சதாம் உசேன்(26), தெற்கு உக்கடத்தை சேர்ந்த இப்ராகிம் என்கிற ஜாகின் ஷா(28) உட்பட 7 பேரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

சோதனை நடந்து கொண்டிருந்தபோதே முகமது அசாருதீனை கரும்புக் கடைப் பகுதியில் அவர் நடத்தி வரும் டிராவல்ஸ் நிறுவனத்துக்கு அழைத்து சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள்,அவரின் டிராவல்ஸ் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் லேப்- டாப், டைரி, பென் டிரைவ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இலங்கை தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்ட சஹ்ரானுடன் முகமது அசாருதீன் முக நூல் மூலம் தொடர்பில் இருந்துள்ளதும், இவர்கள் 6 பேரும் தடை செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கருத்துக்களை சமூக வலை தளங்களில் பரப்பி வந்ததும் தெரிய வந்தது.

மேலும் இவர்கள் ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பிற்கு இளைஞர்களை சேர்க்கும் நோக்கில் செயல்பட்டு இருப்பதும், அவ்வாறு சேர்ந்த இளைஞர்கள் மூலம் தமிழகம், கேரளாவில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதும் தெரியவந்தது. இந்த கும்பலின் தலைவராக முஹமது அசாருதீன் செயல்பட்டுள்ளார்.

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது

Fri, 06/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை