உலகக் கிண்ணத்தில் முதல் வெற்றியை சுவைத்தது தென்னாபிரிக்க அணி

உலகக் கிண்ணப் போட்டிகளில் தோல்விகளைச் சந்தித்து வந்த தென்னாபிரிக்க அணி, ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் வென்றதன் மூலம் தன்னுடைய முதல் வெற்றியை பெற்றுள்ளது.

உலகக் கிண்ணம் தொடரின் 21ஆவது லீக் போட்டியாக கார்டிப் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகள் கடந்த சனிக்கிழமை மோதின.

இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத தென்னாபிரிக்க அணி நாணய சுழற்சியில் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, தென்னாபிரிக்க வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 34.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 125 ஓட்டங்களை குவிந்திருந்தது.

அந்த அணியில் ஹஸ்ரத்துல்லா ஸசாய் (22), நூர் அலி ஸத்ரான் (32) மற்றும் ரஷீத் கான் (35) ஆகியோரை தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க எண்களையே குவித்திருந்தனர்.

தென்னாபிரிக்க அணி சார்பில் இம்ரான் தாஹிர் 4 விக்கெட்டுகளையும், கிறிஸ் மோரிஸ் 3 விக்கெட்டுகளையும், ஆண்டிலே பிலுக்குவாயோ 2 விக்கெட்டுகளையும், காகிசோ ரபாடா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர்.

126 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி, 28.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே பறிகொடுத்து வெற்றி பெற்றது.

டி கொக் 68 ஓட்டங்களைப் பெற்றதோடு ஹாஷிம் அம்லா ஆட்டமிழக்காது 41 ஓட்டங்களை குவித்தார்.

இதன்மூலம் 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற தொன்னாபிரிக்க அணி மூன்று புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியவில் 7 ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டது.

இதுவரை ஆடிய நான்கு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த ஆப்கானிஸ்தான் அணி கடைசி இடத்தில் உள்ளது.

Mon, 06/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை