மாலிங்கவுக்கு திமுத் கருணாரத்ன புகழாரம்

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இலங்கை அணி பெற்றுக்கொண்ட வெற்றிக்கு காரணமான நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவுக்கு இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன புகழாரம் சூட்டினார்.

லீட்ஸின் ஹெட்டிங்லி மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் இம்முறை உலகக் கிண்ணத்தில் 2ஆவது வெற்றியைப் பதிவு செய்த இலங்கை அணி, அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

இலங்கை அணி அரையிறுதிக்கு செல்லாது என கருதப்பட்ட நிலையில், வலுவான இங்கிலாந்து அணியை வீழ்த்தி மற்ற அணிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் இலங்கை அணி. எஞ்சியுள்ள 3 போட்டிகளிலும் வெற்றிகளை தொடர்ந்தால் அரையிறுதி செல்லும் வாய்ப்பைப் பெறும்.

இந்தப் போட்டியில் துடுப்பாட்டத்தில் அஞ்சலோ மெதிவ்ஸ் 85 ஓட்டங்களைப் பெற்று வலுச்சேர்க்க, வேகப் பந்துவீச்சில் மிரட்டிய லசித் மாலிங்க 43 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், தனஞ்சய டி சில்வா 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி இலங்கை அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.

இந்த நிலையில், போட்டியின் பின் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த லசித் மாலிங்கவுக்கு அணித் தலைவர் திமுத் கருணாரத்ன பாராட்டுக்களைத் தெரிவித்து இருந்ததுடன், இலங்கை அணியின் வரலாற்று சாதனையாளர் என்று புகழாராம் சூடினார். அவர் தொடர்ந்து பேசுகையில்,

“உண்மையில் லசித் மாலிங்க ஒரு சாதனையாளர். அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்று நன்கு தெரியும். அதேபோன்று அவர் என்ன செய்தாலும், அவர் தன்னால் முடிந்ததைச் சிறந்த முறையில் முடிப்பார். அதனால் தான் நான் ஏற்கனவே கூறினேன், அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக வீட்டிற்குச் சென்று திரும்பி வர விரும்பினால், அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் நாங்கள் அனுமதி அளித்திருந்தோம்.

எனவே அவர் மீண்டும் அணியுடன் இணைந்துகொண்டு இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு சிறந்த முன்மாதிரியாக இருந்தார். அவர் தனக்குத் தெரிந்ததைச் செய்கிறார். அதுதான் முக்கிய விடயம்” என கூறினார்.

இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடினால் எங்களுக்கு நிச்சயமாக ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நாங்கள் நினைத்தோம். அதேபோன்று இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு இரண்டு விக்கெட்டுக்களைக் கைப்பற்ற வேண்டும். அதைத் தான் நான் அணியில் உள்ள வீரர்களிடம் தெரிவித்தேன்.

அத்துடன், ஓட்டங்களைக் குவிப்பதற்கு இந்த ஆடுகளம் மிகவும் பொருத்தமாக இருந்தது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடும் அணி 300 ஓட்டங்களுக்கு மேல் குவிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

எனினும், ஆரம்பத்திலேயே நாங்கள் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறினாலும், அஞ்சலோ மெதிவ்ஸ் மாத்திரம் பொறுப்புடன் விளையாடி நம்பிக்கை கொடுத்தார். இதனால் நாங்கள் 232 ஓட்டங்களைப் பெற்றோம். எனவே மெதிவ்ஸின் அனுபவம் எமது வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருந்தது என்றும் திமுத் குறிப்பிட்டார்.

இந்த வெற்றியானது இலங்கை அணிக்கு அரையிறுதிக்கான நம்பிக்கையை கொடுத்து இருந்தாலும், திமுத் கருணாரத்ன அதுதொடர்பில் இன்னும் யோசிக்கவில்லை எனவும், எஞ்சியுள்ள போட்டிகளை ஒவ்வொன்றாக வெற்றி பெறுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

நாங்கள் அடுத்து விளையாடவுள்ள (28) தென்னாபிரிக்காவுடனான போட்டியுடன் ஒவ்வொரு போட்டிகளை சந்திக்க விரும்புகிறோம். எனவே நாங்கள் அந்தப் போட்டியை வெற்றிபெற விரும்புகிறோம், அதுதான் எமது முக்கிய கவனமாக உள்ளது. அந்தப் போட்டியில் நாங்கள் அதிக கவனம் செலுத்தவுள்ளோம், அதை வெல்ல முடிந்தால் அடுத்த போட்டி தொடர்பில் திட்டமிடுவோம் என தெரிவித்தார்.

Mon, 06/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை