ஐ.நா பாதுகாப்பு சபை தீர்மானங்களுக்கு செயல்வடிவம் வழங்க இலங்கை இணக்கம்

மிலேச்சத்தனமான தீவிரவாத முறியடிப்பு;

பயங்கரவாதம் மற்றும் மிலேசத்தனமான தீவிரவாதம் ஆகியவற்றை முறியடிக்கும் ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களுக்கு செயல்வடிவம் வழங்க இலங்கை முன்வந்துள்ளது.

பயங்கரவாத ஒழிப்பின்போது சர்வதேச விழுமியங்கள் மற்றும் நடைமுறைகளின் பிரகாரம் ஐ.நாவின் பொறிமுறைகளைப் பின்பற்றவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. ஐ.நா உதவிச் செயலாளர் நாயகமும், பயங்கரவாத எதிர்ப்பு நிறைவேற்று பணியகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான மிச்சேல் கொனிங்ஸின் இலங்கை விஜயத்தின்போது இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. குறிப்பாக வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுடன் நடைபெற்ற சந்திப்பில் ஐ.நாவின் பாதுகாப்புச் சபைத் தீர்மானங்களுக்கு செயல் வடிவம் கொடுப்பது பற்றிக் கலந்துரையாடப் பட்டுள்ளது.

இச்சந்திப்பில் பயங்கரவாதத்திற்கு நிதியுதவியளித்தல் மற்றும் சொத்துக்களை முடக்குதல், வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளை கையாள்தல், பயங்கரவாத முறியடிப்பு சட்டவாக்கம், அடிப்படைவாதம் மற்றும் மிலேச்சத்தனமான தீவிரவாதம் ஆகியவற்றை முறியடித்தல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் பயங்கரவாதத்தால் விடுக்கப்பட்டுள்ள புதிய அச்சுறுத்தலை முறியடிப்பதற்கு உதவுமாறு ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸிடம், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன விடுத்த வேண்டுகோளுக்கு அமையவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த அழைப்புக்கு அமையவும் ஐ.நா உதவிச் செயலாளர் நாயகம் கொனிங்ஸ் இலங்கை வந்திருந்தார்.

இவர் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும் ஏனைய அரசியல் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகத் தலைவர்களையும் சந்தித்திருந்தார்.

பாதுகாப்பு செயலாளர் சான்த கோத்தாகொட மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க ஆகியோரின் இணைத் தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடலில், தாக்குதல்களை தொடர்ந்து பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் பற்றிய விரிவான விளக்கம் அளிக்கப்பட்டதுடன் பயங்கரவாதம் மற்றும் மிலேச்சத்தனமான தீவிரவாதம் ஆகியவற்றை முறியடிப்பதற்கு அவசியமான “ஒட்டுமொத்த அரசாங்க” அணுகுமுறையொன்றின் அவசியம் தொடர்பில் வலியுறுத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, சட்ட அமுலாக்கம் மற்றும் புலணாய்வு முகவராண்மைகள், சட்டத்துறை தலைமை அதிபதியின் திணைக்களம், சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

சமீபத்திய தாக்குதலின் பின்னர், வெளிநாட்டு அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியன தற்கொலை குண்டுத்தாக்குதலில் சம்பந்தப்பட்ட மூன்று குழுக்களான தேசிய தௌஹீத் ஜமாத்,(NTJ) ஜமாஅதே மில்லதே இப்ராஹிம் (JMI) மற்றும் விலாயத் அஸ் ஸைலானி(WAS) ஆகியவற்றை இலங்கையின் உள்நாட்டு சட்டவாக்கத்தின் கீழ் பாதுகாப்பு சபையின் தீர்மானம் 1373(2001) இன் பிரகாரம் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளித்தல் மற்றும் சொத்து முடக்குதல் அம்சங்களுக்கு வழியமைத்ததாக அவற்றை “பயங்கரவாத அமைப்புகளாக” வரையறுப்பதில் ஒத்துழைத்தன என்று சுட்டிக்காட்டப்பட்டது.

சம்பந்தப்பட்ட பாதுகாப்பு சபையின் தீர்மானங்களுக்கு அமைவாக, குறிப்பாக வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளின் வளர்ச்சியை தடுத்தல் மற்றும் மிலேச்சத்தனமான தீவிரவாதத்தை முறியடித்தல் மற்றும் எல்லை பாதுகாப்பின் முக்கியத்தவம் பற்றிய தீர்மானங்களின் 2178(2014) மற்றும் 2396(2017) கீழ் சர்வதேச பயங்கரவாத முறியடிப்பு கடப்பாடுகளுக்கு இசைவாக இலங்கையால் மேற்கொள்ள வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் பற்றியும் ஐ.நா உதவி செயலாளரின் விஜயத்தின் போது ஆய்வுசெய்யப்பட்டன.

விஜயத்தின் முடிவில் இடம்பெற்ற மீளாய்வு கூட்டத்தில் வெளிநாட்டு அமைச்சர் திலக் மாரப்பன, ஐ.நா உதவி செயலாளர் நாயகத்திடம் இருந்து ஒரு மதிப்பீட்டையும் பெற்றுக்கொண்டதுடன் அரசாங்கத்துடனான எதிர்கால ஒத்துழைப்பு தொடர்பிலும் கலந்துரையாடினார்.

Thu, 06/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை