ஓமான் வளைகுடாவில் இரு எண்ணெய் கப்பல்களில் வெடிப்பு: ஊழியர்கள் மீட்பு

ஈரான் – அமெரிக்க  பதற்றத்திற்கு  இடையே சம்பவம்

ஓமான் வளைகுடாவில் வெடிப்புச் சம்பவத்தை அடுத்து கைவிடப்பட்ட இரு எண்ணெய் கப்பல்களில் இருந்து பல டஜன் கப்பல் பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இதில் ஒரு கப்பலில் இருந்து 21 பேரும் மற்றொரு கப்பலில் இருந்து 23 பேரும் அப்புறப்படுத்தப்பட்டதாக கப்பல் இயக்குபவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்தை அடுத்து ஈரான் 44 பேரையும் மீட்டதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இந்த வெப்புச் சம்பவத்திற்கான காரணம் உறுதி செய்யப்படவில்லை. இரு உதவிக்கான அழைப்புகள் கிடைத்ததாக அமெரிக்க கடற்படை குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சிய கடற்கரைக்கு அப்பால் ஒரு மாதத்திற்கு முன் நான்கு எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்ட நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முந்தைய சம்பத்தின் பின்னணியில் அரசொன்று இயங்குவதாக ஐக்கிய அரபு இராச்சியம் குற்றம்சாட்டி இருந்தது. அந்தத் தாக்குதல்களுக்கு கடற்படை கண்ணிவெடிகள் பயன்படுத்தப்பட்டிருந்தது. அந்தத் தாக்குதலை ஈரான் செய்ததாக அமெரிக்கா குற்றம்சாட்டியபோதும் ஈரான் அதனை நராகரித்தது.

அமெரிக்கா மற்றும் அதன் வளைகுடா கூட்டணி நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்திருக்கும் சூழலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

நேற்றைய சம்பவத்தை அடுத்து சுமார் ஐந்து மாதங்களாக குறைந்திருந்த எண்ணெய் விலை 3.9 வீதம் அதிகரித்திருப்பதாக பிலுௗம்பர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

பஹ்ரைனில் தளம்கொண்டிருக்கும் அமெரிக்க கடற்படை வெளியிட்ட அறிவிப்பில், அமெரிக்க கடற்படைக்கு இரு வெவ்வேறு உதவி அழைப்பு கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து யு.எஸ்.எஸ் பெயின்பிரிட்ஜ் கப்பல் சம்பவ இடத்தை நோக்கி உதவிக்கு விரைந்துள்ளது.

இந்த பகுதியில் அதிக அவதானத்துடன் இருக்கும்படி, பிரிட்டன் ரோயல் நேவி கடற்படையுடன் தொடர்புடைய கடல்சார் வர்த்தக செயற்பாடுகளுக்கான அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கப்பல் ஒன்றில் இருந்து தீப்பிடித்து புகை வெளிவருவது போன்ற புகைப்படத்தை ஈரான் செய்தி நிறுவனமான இரிப், டுவிட்டரில் வெளியிட்டபோதும் அதனை சுயாதீனமாக உறுதி செய்ய முடியாதுள்ளது.

இவ்வாறு வெடிப்புச் சம்பவங்களுக்கு உள்ளாகி இருக்கும் ஒரு கப்பலான பிரோன் அல்டயார் கப்பலின் உரிமை உடைய தாய்வான் அரச எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் பேச்சாளர் வூ இபாங் குறிப்பிடும்போது, அந்தக் கப்பல் 75,000 தொன்கள் நப்தா மூலப்பொருளைக் கொண்டிருப்பதாகவும் கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதாக சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மார்ஷல் தீவுகளின் கொடியைக் கொண்ட கப்பலில் இருந்து அனைத்து ஊழியர்களும் மீட்கப்பட்டு விட்டதாக அவர் குறிப்பிட்டார். அந்தக் கப்பல் தீப்பற்றவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பனாமா நாட்டு கொடியுடனான மற்றைய கப்பலில் இருந்த ஊழியர்கள் அருகால் சென்ற கப்பல் ஒன்றினால் மீட்கப்பட்டுள்ளனர். இந்தக் கப்பலில் மெதனோல் இருந்திருப்பதோடு அது மூழ்கும் ஆபத்து இல்லை என்று பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அந்த கப்பல் தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தின் புஜ்ராவில் இருந்து சுமார் 80 மைல்கள் தொலைவிலும் ஈரானில் இருந்து 16 மைல்கள் தொலைவிலும் உள்ளது. மீட்கப்பட்ட கப்பல் பணியாளர்கள் ஜஸ்க் துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டதாக ஈரான் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கில் ஸ்திரமற்ற சூழலை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டி ஈரான் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

கடந்த மே மாதத் தொடக்கம் அமெரிக்க பிராந்தியத்திற்கு விமானதாங்கி கப்பல் மற்றும் குண்டு வீசும் விமானங்களை அனுப்ப ஆரம்பித்துள்ளது. பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகள் மீது ஈரான் ஆதரவுப் படைகள் தாக்குதல் நடத்த திட்டமிடுவதாக கூறியே அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்தது.

இந்த குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் ஈரான் அமெரிக்கா ஆக்ரோஷமான செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டியது.

 

Fri, 06/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை