தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பம்

பல பகுதிகளில் 200 மி.மீ கன மழை

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக எதிர்வரும் சில தினங்களுக்கு நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பிரதேசங்களில் சுமார் 150 தொடக்கம் 200 மில்லிமீற்றர் வரை கடும் மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.

இதற்கமைய களுத்துறை, காலி, இரத்தினபுரி, மாத்தறை, கேகாலை ஆகிய மாவட்டங்களில் அதிக மழையை எதிர்பார்க்க முடியுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேலும் இதே காலப்பகுதியில் கொழும்பு, புத்தளம், நுவரெலியா,கம்பஹா,கண்டி,ஹம்பாந்தோட்டை, மன்னார் ஆகிய மாவட்டங்களில் 100 தொடக்கம் 150 மில்லிமீற்றர் மழை பெய்யலாமென்றும் கணிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஊவா மாகாணத்திலும் குருணாகலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றரிலும் அதிக மழை பெய்யுமென்றும் வானிலை அவதான நிலையம் கூறியது.

கடும் மழை பெய்யும் சந்தர்ப்பங்களின்போது காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 40 தொடக்கம் 50 கிலோமீற்றராக இருக்குமென்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை புத்தளத்திலிருந்து காலியூடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிரதேசம் கடும் கொந்தளிப்பாக இருக்குமென்பதுடன் சுமார் 2.5 தொடக்கம் 03 மீற்றர் வரையான பாரிய அலைகள் உருவாக வாய்ப்பிருப்பதனால் கடற்படையினரையும் மீனவர்களையும் கடலுக்குச் செல்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் கேட்டுக்ெகாண்டுள்ளது.

இதன்படி கற்பிட்டி, சிலாபம், கொழும்பு,பாணந்துறை, பேருவளை, அம்பலாங்கொடை, காலி, மிரிஸ்ஸ, ஹிக்கடுவை மற்றும் தங்காலை ஆகிய கடற்பிரதேசங்களில் கடல் கொந்தளிப்புடன் இருக்குமென்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

லக்ஷ்மி பரசுராமன்

 

 

Sat, 06/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை