ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க சூடான் இராணுவம் நடவடிக்கை

இராணுவ தலைமையகத்திற்கு முன்னால் நீண்ட நாட்களாக முகாமிட்டிருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு சூடான் இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தலைநகர் கார்டூமில் நேற்று துப்பாக்கிச் சத்தம் கேட்ட வண்ணம் இருந்ததாகவும் உயிரிழப்புகள் பதிவாகி இருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் கடந்த ஏப்ரலில் சதிப்புரட்சி ஒன்றின் மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட பின் சூடானில் நிலைமாற்று இராணுவ கெளன்ஸில் ஒன்றே ஆட்சி புரிந்து வருகிறது.

எனினும் சிவில் அரசொன்றிடம் நாட்டின் ஆட்சி வழங்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

“ஆர்ப்பாட்டத் தளத்தை கலைப்பதற்கு இராணுவம் முயற்சிக்கிறது” என்று தேசிய அளவிலான ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை வகித்திருக்கும் சூடான் தொழில்சார் சம்மேளனம் நேற்று வெளியிட்ட சுருக்கமான அறிவிப்பு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படையினரை சமாளிப்பதற்காக ஆர்ப்பாட்டக்காரர்களால் டயர்கள் கொழுத்தப்பட்டு தடுப்புகள் போடப்பட்டிருப்பதாக பார்த்தவர் ஒருவர் விபரித்துள்ளார்.

இந்த மோதல்களில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டு பலரும் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் இராணுவம் எந்த பதிலும் அளிக்கவில்லை.

இராணுவத் தலைமையகத்திற்கு முன்னால் கடந்த ஏப்ரல் 6 ஆம் திகதி தொடக்கம் ஆர்ப்பாட்டக்காரர்கள் நிலைகொண்டுள்ளனர். இதற்கு ஐந்து தினங்களுக்கு பின் பஷீர் பதவி கவிழ்க்கப்பட்டார்.

ஏற்பாட்டாளர்கள் மற்றும் ஆளும் ஜெனரல்கள் கடந்த மாதம் புதிய நிர்வாகக் கட்டமைப்பு ஒன்றுக்கு உடன்பாடு எட்டப்பட்டதாக அறிவித்தனர். சிவில் அரசு ஒன்றுக்கான மூன்று ஆண்டுகள் ஆட்சி மாற்றக்காலத்திற்கு இதன்போது இணக்கம் ஏற்பட்டது.

இந்த ஆட்சி மாற்றக் காலத்தில் முக்கிய தீர்மானங்களை எடுக்கும் இறைமை கெளன்சில் எவ்வாறு அமையும் என்பது பற்றி இன்னும் இரு தரப்புக்கும் இடையில் இணக்கம் ஏற்படவில்லை.

Tue, 06/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை