சீனாவுக்கு நாடு கடத்தும் சட்டத்தை முன்னெடுக்க ஹொங்கொங் உறுதி

பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு மத்தியில்:

பாரிய ஆர்ப்பட்டத்திற்கு மத்தியில் சீன பிரதான நிலத்திற்கு நாடுகடத்த அனுமதிக்கும் சர்ச்சைக்குரிய சட்டத்தை கைவிடப்போவதில்லை என்று ஹொங்கொங் தலைவி கர்ரி லாம் குறிப்பிட்டுள்ளார்.

கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த சட்டமூலத்தின் மூலம் அரசியல் எதிர்ப்பாளர்களை சீனா இலக்கு வைக்கும் என்று அச்சம் நிலவும் நிலையில் இதற்கு எதிராக ஹொங்கொங்கில் ஆயிரக்கணக்கானவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கர்ரி லாம், இந்தச் சட்டம் அவசியமாக இருப்பதாகவும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் இருப்பதாக சீன அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

ஞாயிறு ஆர்ப்பாட்டத்தின் உச்சகட்டத்தில் 240,000 பேர் வரை பங்கேற்றதாக அதன் ஏற்பாட்டாளர்கள் கணித்துள்ளனர். ஏற்பாட்டாளர்களின் இந்த எண்ணிக்கை உறுதி செய்யப்படும் பட்சத்தில் 1997 ஆம் ஆண்டு ஹொங்கொங் சீனாவிடம் கையளிக்கப்பட்டது தொடக்கம் இடம்பெற்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்டமாக இது அமையும்.

கடந்த ஞாயிறு இடம்பெற்ற ஆர்ப்பட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பொலிஸார் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் குறைந்தது மூன்று அதிகாரிகள் மற்றும் ஒரு ஊடகவியலாளர் காயமடைந்தனர்.

அடிக்கும் வெயிலில் வெள்ளை உடை அணிந்து வணிகர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், ஜனநாயகத்திற்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் மத குழுக்கள் என சமூகத்தின் அனைத்து பிரிவினரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

“இது தீய சட்டம். இது ஹொங்கொங்கிற்கு வாழ்வா சாவா போராட்டம். அதனால்தான் நான் வீதிக்கு வந்து போராடுகிறேன்” என்று 59 வயதான பேராசிரியர் ரொக்கி சாங் ரோய்ட்டர்ஸ் செய்தி முகாமையிடம் குறிப்பிட்டார்.

மக்களின் குரல்களுக்கு யாரும் செவிசாய்ப்பது இல்லை என்று ஏ.எப்.பி செய்தி முகாமையிடம் 18 வயதான இவான் வாங் கூறினார்.

“சர்வதேச நிதி மையமாக இருக்கும் ஹொங்கொங்கின் மரியாதையை மட்டும் இந்த சட்டம் கெடுக்கவில்லை. நீதி அமைப்பின் மீதும் இது தாக்கம் செலுத்துகிறது” என்று போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

இந்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின் விவாதத்தில் எம்.பிக்கள் பங்கேற்கும் நாளை மற்றொரு பேரணி நடத்தப்படவிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த கர்ரி, இந்த சட்டம் பிராந்தியம் அனுபவித்து வரும் சுதந்திரங்களை அரித்துவிடாது என்று உறுதி அளித்துள்ளார்.

“இந்த சட்டமூலம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டதில்லை” என்று லாம் கூறினார். இதில் அவர் சீனாவையே குறிப்பிட்டிருந்தார். ஹொங்கொங்கின் மனசாட்சி மற்றும் கடப்பாட்டுடன் இந்த சட்டம் பரிந்துமுரைக்கப்பட்டது என்்றும் அவர் கூறினார்.

வரும் ஜூலைக்கு முன்னர் இந்தச் சட்ட திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு திட்டமிடும் லாமின் முயற்சிக்கு இந்தப் பேரணி முட்டுக்கட்டையாக உள்ளது.

இந்த சட்டம் நடைமுறைக்கு வரும்பட்சத்தில், கொலை, பாலியல் வல்லுறவு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்று சந்தேகிக்கும் நபர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சீனா, தாய்வான் கோரினால் அவர்களிடம் அந்த நபர்களை ஒப்படைக்க இந்த சட்ட திருத்தம் அனுமதிக்கிறது.

ஆனால், இந்த சட்டம் மூலமாக அரசியல் ரீதியாக எதிராக இருப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என மக்கள் கருதுகிறார்கள்.

ஆனால், ஹொங்கொங் நீதித்துறையிடம்தான் முழு அதிகாரம் இருக்கும். அரசியல், மத ரீதியாக குற்றங்கள் புரிந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் சீனாவிடம் ஒப்படைக்கப்பட மாட்டார்கள் என ஹொங்கொங் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பிரிட்டனின் காலனி நாடாக இருந்த ஹொங்கொங், 1997ஆம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட பின் ஒரு தேசம், இரண்டு அமைப்பு முறைகளை கொண்டு இயங்கி வருகிறது.

ஹொங்கொங்கிற்கு என்று தனிச்சட்டம் உள்ளது. சீன மக்களுக்கு கிடைக்காத ஜனநாயக சுதந்திரம் ஹொங்கொங் மக்களுக்கு உள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 20 நாடுகளுடன் ஹொங்கொங் குற்றவாளிகளை ஒப்படைக்கும் சட்டத்தை போட்டுள்ளது. ஆனால், அது போன்ற சட்ட ஒப்பந்தம் சீனாவுடன் இல்லை. இருபது ஆண்டுகளாக இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

எனினும் ஹொங்கொங்கிற்கு வழங்கப்பட்டிருக்கும் அடிப்படைச் சட்டம் 2047 ஆம் ஆண்டு காலாவதியாகவுள்ளது. அதற்குப் பின் ஹொங்கொங்கின் தன்னாட்சியின் எதிர்காலம் பற்றி தெளிவில்லாமல் உள்ளது.

Tue, 06/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை