சர்ச்சைக்குரிய சட்டம் கைவிடப்பட்டும் ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டம் நீடிப்பு

சர்ச்சைக்குரிய நாடுகடத்தும் சட்டத்தை ஹொங்கொங் நிர்வாகம் கைவிட்டபோதும் மற்றொரு போராட்டத்திற்காக ஹொங்கொங்கில் மக்கள் நேற்று வீதிகளில் ஒன்று திரண்டனர்.

சில குற்றங்கள் இழைத்தவர்களை சீனாவுக்கு நாடுகடத்தும் சட்டம் காரணமாக கடந்த வாரம் ஹொங்கொங்கில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

எனினும் இந்தத் திட்டம் தற்போதைக்கு இடைநிறுத்தப்படுவதாக ஹொங்கொங்கின் தலைமை நிறைவேற்று அதிகாரி கெர்ரி லாம் கடந்த சனிக்கிழமை அறிவித்தார்.

எனினும் அது நிரந்தரமாக கைவிடப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத் தலைவர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர். இதில் ஹொங்கொங் தலைவி லாம்மை பதவி விலகவும் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

ஹொங்கொங்கில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பது குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கவலை அடைந்திருப்பதோடு, இந்நிலையில் இந்த சட்டமூலம் ஹொங்கொங் பல ஆண்டுகளில் கண்டிராத வன்முறையைத் தூண்டியது.

கடந்த புதனன்று ரப்பர் குண்டுகள் மற்றும் கண்ணீர்்ப்புகை கொண்டு ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த கலைக்கப்பட்டனர்.

நேற்றுக் காலை நகரின் விக்டோரியா சதுக்கத்திற்கு பெரும் எண்ணிக்கையான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று திரண்டனர். இதில் பலரும் கறுப்பு உடை அணிந்து வெள்ளை பூக்களை ஏந்தி இருந்தனர்.

ஆர்ப்பாட்டங்களில் ஒரு ஆர்ப்பாட்டக்காரர் உயிரிழந்ததற்கு சிலர் அஞ்சலி செலுத்தினர். சர்ச்சைக்குரிய சட்டமூலத்தை அகற்றக் கோரும் பதாகை ஒன்றை கோபுரம் ஒன்றில் கட்ட முயன்றபோது கீழே விழுந்து அந்த ஆர்ப்பாட்டக்காரர் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.

இதன்போது கடும் வெயிலைப் பொருட்படுத்தாமல் மக்கள் பேரணியில் பங்கேற்றனர். விக்டோரியா பூங்காவில் ஆரம்பித்து ஹொங்கொங்கின் மத்திய வட்டாரத்திலுள்ள அரசாங்க அலுவலங்களுக்கு மக்கள் பேரணியாகச் சென்றனர்.

Mon, 06/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை