உயிரிழந்தோருக்கு நட்டஈடு வழங்க விசேட பொருளாதார பொதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்;

உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் உயிரிழந்தவர்களுக்கு நஷ்டஈட்டை வழங்குவதற்கு பிரதமர், தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்ற அமைச்சின் கீழ் விசேட பொருளாதார பொதியொன்று அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இதற்கமைய காயமடைந்தவர்கள், நீண்டகால அங்கவீனமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படவேண்டிய நஷ்டஈடு தொடர்பில் தீர்மானிப்பதற்கு விசேட அலுவலகத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது மாத்திரமன்றி உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறை மற்றும் அதனுடன் இணைந்த துறைகளை மீளக்கட்டியெழுப்புவதற்கான நிவாரணங்கள் நிதியமைச்சின் ஊடாக பெற்றுக் கொடுக்கப்படுவதாகவும் இது தொடர்பான சுற்றுநிருபம் மத்திய வங்கியின் ஆளுநர் ஊடாக சகல வங்கிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு தனிப்பட்ட ரீதியில் நன்றி கூறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்திருக்கும் அதேநேரம், ஐரோப்பிய நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு ஈர்ப்பதற்கான பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், பல்வேறு ஐரோப்பிய நாடுகள் இலங்கை தொடர்பில் வித்திருந்த பயண எச்சரிக்கையை நீக்கியிருப்பதாகவும் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சியினருடன் கடந்த வாரம் கலந்துரையாடியிருந்தேன். உயிரிழந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு தனியான பொருளாதார பொதியொன்றை அறிமுகப்படுத்தியுள்ளோம் என்றார். இதேவேளை, ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் அறிக்கை எப்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸ்ஸாநாயக்க கேள்வி யெழுப்பினார்.

கடந்த மே 1ஆம் திகதி குறித்த விசாரணை ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை தனக்கு கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். எனினும் இந்த அறிக்கை இன்னமும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

எனவே இந்த ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை எப்போது வெளியிடப்படும்? அது பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படுமா?அதில் முன் வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் என்ன? என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

மகேஸ்வரன் பிரசாத்

 

Sat, 06/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை