முஸ்லிம் அரசியல்வாதிகள் இனங்களை எதிரிகளாக்கி வருவது ஆரோக்கியமல்ல

கல்முனைத் தமிழ்மக்களின் நீண்டகால தேவையான கல்முனை வடக்கு செயலகம் தரமுயர்த்தாமைக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளின், செயற்பாடே காரணம். தமிழ் தலைமைகள் ஒன்றிணைந்தாலே இதனை முறியடிக்கலாம் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.

கல்முனையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு நேற்று விஜயம் செய்து உண்ணாவிரதிகளின் நிலைமைகளைப் பார்வையிட்ட பின்னர் கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,இன்று நடைபெறும் தெரிவுக்குழு விசாரணை என்பது ஒரு நாடகம். உண்மையில் இவ்விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த பிரதேசம் கல்முனையாகும். அவர்களின் பாரம்பரிய பூமியை அவர்கள் ஆள்வதற்கு தடைவிதிக்க இவர்கள் யார்? இக்கட்டத்திலாவது இப்பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தாவிட்டால் பின்னால் பாரிய விளைவுகளை எதிர்நோக்க வேண்டிவரும்.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தீப்பற்றும்வரை பார்த்திருக்காமல் உடனடியாகச் செயற்பட்டு தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்திற்கு நல்ல பதிலை வழங்க வேண்டும். இங்கு பௌத்த தேரர் இந்துக் குருக்கள் கிறிஸ்தவ தலைவர்கள் மாநகர சபை உறுப்பினர்கள் இருவர் உட்பட பல உயிர்கள் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன.

முஸ்லிம் அரசியல்வாதிகளின் கதையைக்கேட்டு அரசாங்கம் இன்னும் தவறிழைத்தால் போராட்டம் வெடிக்கும். இனங்களிடையே பகைமையை மூட்டிவிடாதீர்கள்.

முஸ்லிம் அரசியல்வாதிகள் தனது சுய அரசியல் இலாபத்திற்காக இனங்களை எதிரியாக்கி வருகின்றனர்.இது தொடருமானால் எதிர்காலத்தில் பாரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும்.தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையை பார்த்துக் கொண்டிருக்காமல் உடனடியாக பிரச்சினையைத் தீர்க்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

 

Thu, 06/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை