செயலாளரான என்னால் ஜனாதிபதியை சந்திக்க முடியாதிருந்தது

புலனாய்வு தகவல்கள் கிடைப்பதாக ஜனாதிபதி கூறியதாக நான் கூறவில்லை

தேசிய பாதுகாப்பு தொடர்பான புலனாய்வுத் தகவல்களை அரசாங்க புலனாய்வு சேவையின் பணிப்பாளர், ஜனாதிபதிக்கு நேரடியாகத் தெரியப்படுத்தியிருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகத் தான் பதவியேற்ற பின்னர் நான்கு தடவைகளே தேசிய பாதுகாப்புச் சபை கூட்டப்பட்டதாகவும், அவ்வாறு கூட்டப்பட்ட கூட்டங்களுக்கு பிரதமர் உள்ளிட்ட சிலரை அழைக்க வேண்டாமென ஜனாதிபதி தனக்கு அறிவுறுத்தியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல் குறித்த பாராளுமன்ற தெரிவுக் குழுவின் முன் சாட்சியமளிக்கும் போதே ஹேமசிறி பெர்னாண்டோ இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

தேசிய பாதுகாப்புச் சபை கூட்டப்பட்டாலும் அதில் தேசிய பாதுகாப்புத் தொடர்பான முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்படவில்லை. தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் புலனாய்வுத் தகவல்கள் எதுவும் கலந்துரையாடப்படவில்லை. எனினும், மதூஷ் தொடர்பில் அதிகம் கலந்துரையாடப்பட்டதாகவும் கூறினார்.

இது தவிரவும், தென்பகுதியில் துப்பாக்கியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மீன்பிடி மற்றும் ட்ரோன் கமராக்களைக் கொண்டு நடத்தப்படக் கூடிய பாரிய தாக்குதல்கள் குறித்த பல்வேறு விடயங்களே இங்கு பேசப்பட்டன.

இந்த விடயங்கள் தனக்கு பொழுதுபோக்காக இருந்ததாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டார்.

பாதுகாப்புச் செயலாளராகப் பதவியேற்ற தினத்தன்று தனக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலொன்றை ஜனாதிபதியிடம் தெரிவித்தபோது அது குறித்து அரசாங்க புலனாய்வு சேவையின் பணிப்பாளர் ஏற்கனவே தனக்குத் தெரியப்படுத்தியதாகக் கூறியுள்ளார். இதுபோன்று பிறிதொரு தடவையும் கூறவே புலனாய்வுத் தகவல்களை ஜனாதிபதிக்கு தான் தெரியப்படுத்தச் செல்லவில்லையென்றும் அவர் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியை அதன் செயலாளரான தன்னால் சந்திக்க முடியாதிருந்ததாகவும், ஆவணமொன்றில் கையொப்பம் பெறுவதாயின் மூன்று மணித்தியாலங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியிருந்ததாகவும் கூறினார். தேசிய பாதுகாப்புச் சபைக்கு யார் யாரை அழைக்கக் கூடாது என்பது குறித்து ஜனாதிபதி தனக்கு அறிவுறுத்தியிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

“ஏப்ரல் 20ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் அரசாங்க புலனாய்வு சேவையின் பணிப்பாளர் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினார். “சேர் உங்களுக்கு வட்ஸ்அப் செய்தியொன்றை அனுப்பியுள்ளேன் அதனைப் பார்வையிடுங்கள்” என்றார். நாளை பாரிய ஆபத்தான சம்பவமொன்று நிகழப்போவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது பற்றி பொலிஸ் மாஅதிபருக்கு அழுத்தம் கொடுக்குமாறு சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. நான் பொலிஸ் மாஅதிபருக்கு அழைப்பை ஏற்படுத்தினேன், உரிய நடவடிக்கை எடுத்திருப்பதாக அவர் கூறினார். அதன் பின்னர் அரசாங்க புலனாய்வு சேவைப் பணிப்பாளரின் தொலைபேசி செயற்படவில்லை. மறுநாள் காலை 7.45 மணியளவில் மீண்டும் அழைப்பை ஏற்படுத்திய அவர் கொழும்பில் எத்தனை மெதடிஸ்ட் தேவாலயங்கள் இருக்கின்றன எனக் கேட்டார். நான் நண்பர்களிடம் விசாரித்து அதுபற்றிக் கூறினேன். இந்தத் தகவல்களை வழங்கி 15 நிமிடத்தில் கொழும்பில் ஹோட்டல் ஒன்றில் குண்டு வெடித்தது என்ற செய்தியை அறிந்து கொண்டேன்” என்றும் அவர் கூறினார்.

இந்தச் சம்பவங்களுக்கு கூட்டுப்பொறுப்பேற்க வேண்டிய பலர் இருக்கின்றனர். இவ்வாறான நிலையில் பொலிஸ் மாஅதிபரில் மாத்திரம் முழுக் குற்றச்சாட்டையும் சுமத்த முடியாது என்பதை தான் ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறியதாவும் குறிப்பிட்டார். இதனாலேயே தான் பாதுகாப்புச் செயலாளர் பதவியை இராஜினாமாச் செய்ததாகவும் ஹேமசிறி பெர்னாண்டே மேலும் தெரிவித்தார்.

ஏதாவது ஒரு முறையில் புலனாய்வுப் பிரிவு மறுசீரமைக்கப்பட வேண்டும் என நினைக்கின்றேன். தாக்குதல்களின் பின்னர் புலனாய்வுப் பிரிவினர் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை நான் ஆராய்ந்திருந்ததாகவும் கூறினார்.

 மகேஸ்வரன் பிரசாத், லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 06/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை