கல்முனையில் தமிழ், முஸ்லிம் ஒற்றுமையை குலைக்க பேரினவாதிகள் கங்கணம்

மன்சூர் எம்.பி

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்துக்கு தமிழ், முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகள் ஏற்படாத வகையில் தீர்வூ காணப்பட வேண்டியது அவசியமாகும் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.

கல்முனையில் இனத்துவ மற்றும் நிலத்தொடர்பற்ற ரீதியில் உருவாக்க எத்தனிக்கும் பிரதேச செயலகத்தை தடை செய்யக்கோரி கல்முனையில் முஸ்லிம் தரப்பினரால் சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இதில் நேற்று முன்தினம் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில், சிறுபான்மை மக்களான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தி அதில் குளிர்காய்வதற்கு பேரினவாத சக்திகள் கங்கணம் கட்டி நிற்கின்றன. இதனை உணர்ந்து தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமைக்கான விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலமே பிரச்சினைகளுக்குத் தீர்வை காண முடியும்.

இந்த விடயத்தில் பேரினவாத சக்திகள் நுழைந்து குளிர்காய்வதற்கு நாங்கள் இடமளிக்கக்கூடாது.

தமிழ், முஸ்லிம் ஒற்றுமையை குலைப்பதற்கு இந்த விவகாரம் கையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சக்திகளுக்கு பலியாகிவிடாமல் நாங்கள் நிதானமாக இந்த விடயத்தை கையாள வேண்டும்.

தமிழர்களின் நிர்வாகத்திற்கு எதிராக முஸ்லிம்கள் ஒருபோதும் செயற்படவில்லை.நிர்வாக ரீதியான எல்லை நிர்ணயம் என்பது ஒரு தனி இனம் சார்ந்த விடயமாகும்.

இவ்வாறானதொரு நிலையில் எல்லைகளை வரையறுக்கும்போது நிலத்தொடர்பற்ற முறையிலான அடிப்படைக் கோட்பாடுகள் மீறப்படக்கூடாது.

எவ்வாறாயினும் நாங்கள் எங்களுக்குள்ளேயே பேசி இதுபற்றி உடன்பாட்டைக் காண வேண்டும்.

கல்முனைப் பிரதேசத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் தங்களது பிரச்சினைகளை தாங்களாகவே தீர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டுமே தவிர சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்கும் சதிவலைக்குள் சிக்கிக் கொள்ளக் கூடாது என்றார்.

(சம்மாந்துறை கிழக்கு தினகரன் நிருபர்)

Mon, 06/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை