உணர்ச்சிகளால் எடுக்கப்படும் முடிவுகள் நாட்டை ஆள்வதற்கு ஒரு போதும் பொருந்தாது

உணர்ச்சிகளால் எடுக்கப்படும் முடிவுகள் நாட்டை ஆள்வதற்கு ஒரு போதும் பொருந்தாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீ. ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

இந்த நாட்டின் அரசியல் வரலாற்றினை எடுத்துப்பார்த்தால். அரசியலில் ஏற்படுத்தப்பட்ட திருப்பு முனைகள் ஒவ்வொன்றுமே சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனையால் ஏற்படுத்தப்பட்ட செயல்களின் விளைவாகவே தோன்றியிருக்கிறது.

முஸ்லிம் அரசியல் தலைவர்களின் சாணக்கிய முடிவு நாட்டுக்கும் குறிப்பாக அவர்களது சமூகத்திற்கும் நன்மையை விளைவித்திருக்கிறது. அரசு தற்போதைய நெருக்கடியிலிருந்து மட்டுமே தப்பியிருக்கிறது. அது தொடரலாம் என ஊகிக்கலாம். இதுவே இன்றைய நிலை. தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவு பூர்வமான முடிவையே எடுக்கும்.

அவர் மேலும் கூறுகையில்,

முடிவுகள் அறிவு சார்ந்ததாக இருக்க வேண்டும். நடந்தேறியிருப்பது ஒரு ”கிலுகிலுப்பு” அரசியல் அது ஸ்திரமில்லாதது.

அத்துரலிய ரதன தேரர் ஒரு பௌத்த பிக்கு, பாராளுமன்றப் பிரதிநிதி, ஒரு அரசியல் கட்சியை ஸ்தாபித்தவர்களில் ஒருவர், பலராலும் மதிக்கப்படுபவர் அவர் ஒரேயொரு கோரிக்கையை முன்வைத்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியிருந்தார். இது அரசை பணியவைக்க அல்லது இணங்கவைக்க எடுக்கப்பட்ட பௌத்த மேலாதிக்க சிந்தனையாகும். அது இன்னமும் உயிர்வாழ்கிறது.

ரிஷாட், ஹிஸ்புல்லா, அசாத்சாலி குற்றம் இழைத்தார்கள் என்று பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் பேசப்பட்டது. அவைகள் விசாரணைகள் மூலம் நிரூபிக்கப்படுவதற்கு வழிவிட்டு விலகியிருக்கிறார்கள். அவர்கள் விலகாதிருந்தால் தேரரின் உயிருக்கு ஆபத்தும் அதனால் நாட்டில் அசாதாரண சூழ்நிலையும் ஏற்பட்டிருக்கலாம் இது அரசியலில் உள்ளவர்களால் ஊகிக்க முடியாததல்ல.

எதிர்க்கட்சி, பொதுஜன பெரமுன என்பன இதற்கு தூபமிடாமலில்லை. முஸ்லிம் அரசியல்வாதிகளின் வெற்றிடங்களால் அரசுக்கு நெருக்கடி ஏற்படும் புதியவர்களைக் கொண்டு நிரப்பலாம். அது நன்மை பயக்குமா? விலகியவர்கள் அரசுக்கு ஆதரவாய் இருப்பதாக தெரிவிக்கிறார்கள். அவர்கள் தங்கள் சமூகத்திற்காகவும், நாட்டுக்காகவும் சிந்திக்கிறார்கள் கட்சிகளுக்கும் கொள்கைகளுக்கும் அப்பால் ஒற்றுமையை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

முஸ்லிம்களின் ஒருசாராரின் பயங்கரவாதச் செயற்பாட்டை நான்வெறுக்கிறேன் அதை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டேன். முஸ்லிம் சமூகத்தின் ஒருசாரார் பாரிய தவறை செய்துவிட்டார்கள். அதை வெளிக்காட்டிய முஸ்லிம்களும் அதே சமூகத்திற்குள் இருக்கிறார்கள். ஏனைய சமூகத்தினர் அப்பாவி முஸ்லிம்களின் மேல் பரிவு காட்டவேண்டும். காலம் வேகமான முடிவுகளை எடுக்க நிர்ப்பந்திக்கும். தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவு பூர்வமான முடிவையே எடுக்கும் என்றார்

புளியந்தீவு குறுாப் நிருபர்

Wed, 06/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை