உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; அநாதரவான குழந்தைகளுக்கென விசேட சிறுவர் நிதியம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் காயமடைந்த குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மரணித்து அல்லது காயமடைந்தமையினால் அநாதைகளான குழந்தைகளுக்காக விசேட சிறுவர் நிதியமொன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

சிறுவர் நிதியமானது 500மில்லியன் ரூபாவினை கொண்டதுடன், அவற்றில் 100மில்லியன் தொகை அரசாங்கத்தினாலும், ஏனைய 400மில்லியன் தொகை நன்கொடைகள் மூலமாகவும் பெற்றுக் கொள்ளப்பட உள்ளது. 

அதேபோன்று இந்தத் தாக்குதலினால் காயமுற்ற நபர்களுக்கு வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கு தேவைப்படும் சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தினால் அந்த செலவுகளை மேற்கொள்வதற்கும் பாதிக்கப்பட்டவர்களின் விசேட தேவைகளை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க உள்ளது.

அந்த அமைச்சரவை பத்திரத்தினை பிரதமரால் இன்று (04) இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் போது முன்வைக்கப்பட உள்ளதுடன், இந்த செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கும் நடைமுறைப்படுத்துவதற்குமாக பிரதமரின் செயலாளரின் தலைமையில் விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட உள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் இதுவரை 261பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றில் 174பேரின் குடும்பங்களுக்கு நஷடஈட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

காயமடைந்த 407பேரில் 226பேர் தொடர்பான மருத்துவ அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதுடன் அவர்கள் அனைவருக்கும் நஷடஈட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

மிகுதி மருத்துவ அறிக்கைகள் கிடைக்கப்பெற்றவுடன் அவர்களுக்கும் உரிய நஷ்டஈட்டுத் தொகையினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பாதிக்கப்பட்ட தேவாலயங்களை மீள புனரமைப்பதற்கு அவசியமான நிதி ஒதுக்கீடுகளும் அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய கட்டிடத்தினை விஸ்தரிப்பதற்காக துறைமுக அதிகார சபைக்குரிய 09பேர்ச்சஸ் காணியும் வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷடஈடு மற்றும் நிவாரணங்களை வழங்குவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முதலாவது அமைச்சரவை பத்திரத்தினை ஏப்ரல் மாதம் 22ஆம் திகதியே முன்வைத்தார். அதற்கு ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தது.

பின்னர் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையினால் பாதிப்படைந்த முஸ்லிம் பள்ளிவாயல்களைப் புனரமைப்பு செய்வதற்கும், பாதிகப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கும் அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொள்வதற்காக பிரதமரால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு மே மாதம் 23ஆம் திகதி அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தது.

Tue, 06/04/2019 - 09:01


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை