போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருக்கோவிலில் ஆர்ப்பாட்டப் பேரணி

கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்தக் கோரிய மதகுருமார்கள் மற்றும் மாநகர சபை உறுப்பினர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வலுசேர்க்கும் வகையில் திருக்கோவில் பிரதேசத்தில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டு இருந்தது.

இவ் ஆர்ப்பாட்டப் பேரணியானது திருக்கோவில் பிரதேச பொது மக்கள், இளைஞர் கழகம் மற்றும் தமிழர் ஒன்றியம் ஆகிய அமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருக்கோவில் விஸ்வதுளசி வித்தியாலயம் முன்பாக இருந்து ஆரம்பமாகி பிரதான வீதியூடாக சென்று திருக்கோவில் தம்பிலுவில் பொது சந்தை கட்டடத்திற்கு முன்பாக பேரணி நிறைவடைந்ததுடன் அங்கு ஊடகங்களுக்கு கருத்துக்களும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தெரிவிக்கப்பட்டன.

கல்முனையில் இடம்பெற்று வரும் வடக்கு தமிழ் உப பிரதேச செலயக தரம் உயர்த்தும் போராட்டமானது தமிழர்களின் 30வருட நிருவாக ரீதியான உரிமை போராட்டம் இதனை யாரும் இனரீதியான போராட்டமாக கருத வேண்டாம். இந்த உண்ணாவிரத போராட்டத்தினை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களும் ஒன்றுமையுடன் இணைந்து கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்

உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மதகுருமார் மற்றும் இளைஞர்களுக்கு என்றும் துணையாக திருக்கோவில் பிரதேச இளைஞர்கள் கரம் கொடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்து இருந்தனர்.

தமிழர்களின் உரிமையை கொடு, தமிழர்களுக்கான நீதி உடன் வேண்டும், அரசாங்கமே வாக்குறுதியை உடன் நிறைவேற்று, தமிழர்களின் உரிமையை கொடுக்க உனக்கென்ன தயக்கம் போன்ற சுலோக அட்டைகளை இளைஞர்கள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்ட பேரணியில் பங்கு கொண்டு தெரிவித்து இருந்தனர்.

திருக்கோவில் தினகரன் நிருபர்

Mon, 06/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை