ஆர்ச்சர், ராய் மற்றும் சர்பிராஸூக்கு ஐசிசியினால் அபராதம் விதிப்பு

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியின் போது, ஐசிசியின் விதிமுறையை மீறிய குற்றச்சாட்டுக்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜொப்ரா ஆர்ச்சர் , ஜேசன் ராய் ஆகியோருக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

பந்து வீசுவதற்கு அதிக நேரத்தினை எடுத்துக்கொண்ட காரணத்திற்காக பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பிராஸ் அஹமட்டுக்கும் ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

இதன்படி, சர்வதேச போட்டியொன்றில் வீரர் ஒருவர் மைதானத்தில் மற்றுமொரு வீரர் அல்லது அதிகாரிகளிடம் நடந்துகொள்ளும் விதம் தொடர்பான ஐசிசியின் 2.3ம் சரத்து விதிமுறையை மீறியுள்ளதாக இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இப் போட்டியில் பாகிஸ்தான் இன்னிங்ஸின் 14வது ஓவரின் போது ஜேசன் ராய், தகாத வார்த்தைகளை பயன்படுத்தியமையை நடுவர்கள் செவிமடுத்துள்ளனர். இதனை அறிந்த நடுவர்கள் போட்டி மத்தியஸ்தருக்கு முறைப்பாடு செய்த நிலையில், ஜேசன் ராய்க்கு ஒரு தரமிறக்கல் புள்ளி உட்பட போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

நடுவரின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடந்துக்கொண்ட இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சருக்கு, ஐசிசியின் 2.8ம் சரத்தின்படி போட்டிக் கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஒரு தரமிறக்கல் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியின் 27வது ஓவரை ஆர்ச்சர் வீசிய போது, நடுவர் வைட் பந்து ஒன்றினை வழங்கியிருந்தார். குறித்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவுக்கும் வகையில் நடந்துக்கொண்டமையால் ஆர்ச்சருக்கு மேற்குறித்த தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கு அடுத்தப்படியாக தங்களது பந்துவீச்சு இன்னிங்ஸை, வழங்கப்பட்ட நேரத்திற்குள் நிறைவு செய்யாததன் காரணமாக பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பிராஸ் அஹமட்டுக்கு போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதமும், வீரர்களுக்கு 10 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி தங்களுக்கு வழங்கப்பட்ட நேரத்தில் ஒரு ஓவரை குறைவாகவே வீசியிருந்தது.

குற்றச்சாட்டுகள் அனைத்தையும் வீரர்கள் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில், போட்டி மத்தியஸ்தர் ஜெப் க்ரொவ் தண்டனைகளை வழங்கியுள்ளார் என்பதுடன், மேலதிக விசாரணைகள் அவசியமில்லை எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Thu, 06/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை