இலங்கை-இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை

இலங்கை அணி தம்முடைய ஆறாவது உலகக் கிண்ண மோதலுக்காக இங்கிலாந்தின் ஹெடிங்லி நகருக்கு சென்றிருக்கின்றது. இங்கிலாந்து – இலங்கை மோதல் இடம்பெறவுள்ள ஹெடிங்லி நகர மைதானம் இலங்கை அணிக்கு ராசியான ஒரு இடமாகும். ஏனெனில், இலங்கை அணி கடைசியாக இங்கே விளையாடிய தமது இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றது.

ஹெடிங்லி மைதானம் இலங்கை அணியுடன் அவர்களது ஆறாவது உலகக் கிண்ண மோதலில் விளையாடப்போகும் இங்கிலாந்து அணிக்கும் ராசியானது என்பதையும் மறுக்க முடியாது. இந்த மைதானத்தில் இங்கிலாந்து அணி, தாம் கடைசியாக விளையாடிய ஆறு ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. எனினும், ஹெடிங்லி மைதானத்தில் இங்கிலாந்தினை கடைசியாக வீழ்த்திய அணியாக இலங்கையே காணப்படுகின்றது. இலங்கை அணி குறித்த வெற்றியினை 2011ஆம் ஆண்டில் பெற்றது.

இந்த உலகக் கிண்ணத் தொடரில் ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி, நான்கு போட்டிகளில் 300 இற்கும் அதிகமான ஓட்டங்களை பெற்றிருக்கின்றது. அத்தோடு, இந்த உலகக் கிண்ணத் தொடரில் ஆப்கானுக்கு எதிரான போட்டியில் 397 ஓட்டங்கள் குவித்து உலகக் கிண்ணப் போட்டி ஒன்றில் தாம் பெற்றுக் கொண்ட மிகக் கூடிய ஓட்டங்களையும் இங்கிலாந்து அணி பதிவு செய்தது. இங்கிலாந்து அணி இந்த உலகக் கிண்ணத்தில் 300 ஓட்டங்கள் பெறாத போட்டி மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரானதாகும். ஏனெனில், குறித்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயித்த வெற்றி இலக்கு 213 ஓட்டங்களாக அமைந்தது.

இப்படியான நிலையில் மிகவும் பலமான துடுப்பாட்ட வரிசையை கொண்டிருக்கும் இங்கிலாந்து அணியினை, தமது ஆறாவது உலகக் கிண்ணப் போட்டியில் வீழ்த்த இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். இலங்கை அணி, இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக பயன்படுத்திய அதே பந்துவீச்சு வரிசையினையே பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான ருமேஷ் ரத்னாயக்க, இங்கிலாந்து அணிக்கு எதிரான மோதலில் இலங்கை அணி சிறப்பாக செயற்படும் என்பதில் உறுதியாக இருப்பதோடு, மிகவும் பலமான இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வரிசையை வீழ்த்த அவர்களது பலவீனங்களை கண்டறிந்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

”எங்களுக்கு அவர்கள் (இங்கிலாந்து) மிகவும் பலமான துடுப்பாட்ட வரிசையினை கொண்டிருப்பது தெரியும் அவர்கள் எப்போதும் எதிர்த்தாடவே முனைவார்கள். அவர்களது திட்டம் கடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டி போன்று இருக்கும்.”

”ஆனால் அவர்களிடம் பலவீனங்கள் இல்லை என நினைப்பது தவறு. நாங்கள் அவர்களை பார்த்திருக்கின்றோம். (நாம்) சாதகமான விடயங்களை முழுமையாக பயன்படுத்தும் நோக்கில் உள்ளதால் எங்களுக்கு அவர்கள் எந்ததெந்த பகுதிகளில் பலவீனமாக இருக்கின்றார்கள் என்பது தெரியும். அவர்கள் பலவீனமாக இருக்கும் பகுதிகள் குறைவு என்ற போதிலும், அவர்களிடம் இருக்கும் பலவீனத்தை எமக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டி உள்ளது.”

இலங்கை - இங்கிலாந்து அணி க்கு எதிரான உலகக் கிண்ண மோதலில் பெரிதாக நம்பி யிருப்பது அனுபவம் கொண்ட லசித் மாலிங்கவின் பந்து வீச்சினையே ஆகும். எனினும், மாலிங்க அடிக்கடி இந்த உலகக் கிண்ணத்தின் போது சொந்த காரணங்களுக்காக இலங்கை வந்து செல்வதால் அவர் இங்கிலாந்து அணியுடனான மோதலுக்கு சரியாக தயாராகியுள்ளாரா? என்ற சந்தேகம் எழுகின்றது.

தனது மாமியாரின் இறுதிக் கிரியைக்காக பங்களாதேஷ் அணியுடனான உலகக் கிண்ண போட்டி மழையினால் கைவிடப்பட்டதனை அடுத்து கடந்த 11ஆம் திகதி இலங்கை வந்த மாலிங்க, கடந்த 14ஆம் திகதி அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக் கிண்ணப் போட்டி நடைபெற முன்னர் மீண்டும் இலங்கை அணியுடன் இணைந்து கொண்டார். இதன் பின்னர், கடந்த 15ஆம் திகதி அவுஸ்திரேலிய அணியுடனான போட்டிக்கு பின்னர் தனது மாமியாரின் நினைவுகூர்தல் நிகழ்வுக்காக மீண்டும் இலங்கை வந்த லசித் மாலிங்க கடந்த 17ஆம் திகதி இலங்கை அணியுடன் மீண்டும் இணைந்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

இங்கிலாந்து அணியுடனான போட்டிக்கு இந்த செவ்வாய்க்கிழமை (18) மைதான வெளியில் தயாராகிய இலங்கை அணி புதன்கிழமை (19) உள்ளக அரங்கில் பயிற்சிகளை மேற்கொண்டது.

”அவர் (மாலிங்க) இங்கே இருப்பதோடு, (புதன்கிழமை) பயிற்சிகளிலும் ஈடுபட தயரானார். எனினும், அவர் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு காலநிலை உகந்ததாக இருக்கவில்லை. அவர் நேற்று நீண்ட நேரம் விமானப் பயணத்திலும் இருந்ததனால், முகாமைத்துவம் அவரை உடனடியாக பந்துவீசவும் அழைக்கவில்லை.”

இதுவரையில் இந்த உலகக் கிண்ணத் தொடரில் அவர் சிறப்பாக செயற்பட்டுள்ளார். சில ஓவர்களை அவர் இன்று பந்து வீசுவது அவருக்கு அவரின் வழமையான பந்துவீச்சு பாணிக்கு திரும்ப உதவியாக இருக்கும்.”

இலங்கை அணி தாம் கடைசியாக விளையாடிய அவுஸ்திரேலிய அணியுடனான உலகக் கிண்ணப் போட்டியில் சிறந்த முறையில் பந்துவீசிய போதிலும் அவுஸ்திரேலிய அணி, குறித்த போட்டியில் துரதிஷ்டவசமாக 50 ஓவர்களுக்கு 334 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. எனினும், குறித்த போட்டியின் இறுதி ஓவர்களில் (அதாவது 46-49 ஓவர்கள் இடையில்) இலங்கை அணி 22 ஓட்டங்களை மாத்திரேமே அவுஸ்திரேலிய அணிக்கு கொடுத்திருந்தது.

இப்போட்டியின் வெற்றி இலக்கினை எட்டுவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி தமது முதல் விக்கெட்டுக்காக 115 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று சிறந்த ஆரம்பத்தை காட்டியது. தொடர்ந்து ஒரு கட்டத்தில் 205 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து காணப்பட்ட இலங்கை அணி, 247 ஓட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது.

ருமேஷ் ரத்னாயக்க இலங்கை அணி தமது துடுப்பாட்டத்தையும் பந்துவீச்சினையும் முன்னேற்றி சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தும் என்பதில் நம்பிக்கையுடன் காணப்படுகின்றார்.

ஆம், பந்துவீச்சாளர்கள் (அவுஸ்திரேலிய மோதலில்) சிறப்பாக செயற்பட்டிருந்தனர். ஆனால் அவர்களிடம் இருந்து இன்னும் நான் மிக அதிகமாக எதிர்பார்க்கின்றேன்.”

துடுப்பாட்ட வீரர்கள் குறித்து நாம் அதிகம் கதைத்திருக்கின்றோம். நாங்கள் தொடர்ச்சியாக சிறப்பாட்டத்தினை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். அத்தோடு, எங்களையும் நாம் அதிகம் நம்ப வேண்டும். எங்களிடம் ஆற்றல் இருக்கின்றது என்பதை எங்கள் துடுப்பாட்ட வீரர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும். யாருக்குமே வீணாக ஆட்டமிழப்பது பிடிக்காத ஒன்று. அது எங்களது மனதில் இருக்க வேண்டும். நாம் விளையாடும் ஒவ்வொரு போட்டிகளிலும் எதிர்பார்ப்புடன் இருக்க வேண்டும். அப்போதே விடயங்கள் எமக்கு சாதகமாக நடக்கும்.”

Fri, 06/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை