ஆப்கானிடம் ஆஸி. இலகு வெற்றி

உலகக் கிண்ண லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அவுஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் இலகு வெற்றி பெற்றது.

பிரிஸ்டல் கவுன்டி மைதானத்தில் கடந்த சனிக்கிழமை நடந்த இப்போட்டியில், நாணய சூழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடியது.

அந்த அணி 38.2 ஓவரில் 207 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அதிகபட்சமாக நஜிபுல்லா 51 ஓட்டங்கள் எடுத்தார். ரகமத் ஷா 43, அணித்தலைவர்் குல்பாதின் 31 ஓட்டங்கள் சேர்த்தனர். அதிரடியாக ஆடிய ரஷித்கான் 3 சிக்சர், 2 பவுண்டரியுடன் 27 ஓட்டங்கள் (11 பந்து) எடுத்தார். அவுஸ்திரேலிய பந்துவீச்சில் கம்மின்ஸ், ஸம்பா தலா 3 விக்கெட், ஸ்டொய்னிஸ் 2, ஸ்டார்க் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 50 ஓவரில் 208 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலியா களமிறங்கியது. பிஞ்ச், வோர்னர் ஜோடி சிறந்த ஆரம்பத்தை தந்தது. பிஞ்ச் 40 பந்தில் அரைசதம் விளாசினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 96 ஓட்டங்கள் சேர்த்த நிலையில், பிஞ்ச் (66) ஆட்டமிழந்தார். கவாஜா (15) ரஷித்கான் சுழலிலும், கடைசி கட்டத்தில் ஸ்மித் (18) முஜீப் பந்திலும் வெளியேறினர்.

ஒருமுனையில் வோர்னர் நங்கூரமிட்டு பொறுமையாக ஆடி அரைச்சதம் அடிக்க அவுஸ்திரேலிய அணி 34.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 209 ஓட்டம் எடுத்து வெற்றி பெற்றது. வோர்னர் ஆட்டமிழக்காது 89 ஓட்டங்களை பெற்றார்.

Mon, 06/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை