ஜனாதிபதித் தேர்தலில் மூவரில் ஒருவரே ஐ.தே.க பொது வேட்பாளர்

அடுத்து நடைபெறவிருக்கும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகிய பதவிகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களான ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரே இருப்பார்கள் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.

ஆளும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவலை முன்வைத்தார்.

யார்? யார்? எந்தப் பதவிகளில் இருப்பார்கள் என்பது தெரியாது, எனினும், கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் மூவரும் இந்த மூன்று பதவிகளில் இருப்பார்கள் என்றும் குறிப்பிட்டார். ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை ஐ.தே.க தெரிவுசெய்வதாக இருந்தாலும் இந்த மூவரில் ஒருவரே தெரிவுசெய்யப்படுவார் எனவும் தெரிவித்தார்.

பிரபல வர்த்தகர் ஒருவரை பொது வேட்பாளராகக் களமிறக்குவது தொடர்பில் வதந்திகள் பரப்பப்படுகின்றன. இவை கற்பனையான வதந்திகளாகும். இறக்குமதி செய்யப்பட்ட தலைவர்களைக் களமிறக்கி சிறந்த பாடத்தை நாம் ஏற்கனவே கற்றுக்கொண்டுள்ளோம். இதனை அடிப்படையாகக் கொண்டு நாம் இனிமேலும் தலைவர்களை இறக்குமதி செய்யப்போவதில்லை. எனவே மூவரில் ஒருவரே தெரிவாக இருக்கும் என்றும் ஹேஷா விதானகே சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்தவொரு கருத்தையும் முன்வைக்கவில்லையென்றும் குறிப்பிட்டார். “ஐக்கிய தேசியக் கட்சியின் தீர்மானத்தில் அவர் தாக்கம் செலுத்த முடியாது. நாம் தெரிவுசெய்யும் வேட்பாளரை ஆதரிப்பதாயினும் அவரால் அது முடியாது. அதனைச் செய்தாவது தனக்கு ஆதரவு எடுக்கப் பார்த்தபோதும் அதனையும் சிலர் பாழாக்கிவிட்டனர்” என்றார். இதேவேளை, அரசாங்க உத்தியோகஸ்தர்கள் குறிப்பாக பெண் உத்தியோகஸ்தர்களின் ஆடை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள சுற்றிநிருபத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

மகேஸ்வரன் பிரசாத்

 

 

 

Sat, 06/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை