புலனாய்வுத் தகவல்களை ஊடகங்கள் முன் வெளியிடுவதை அனுமதிக்க முடியாது

*சேவையிலிருந்து நீக்கப்பட்ட அதிகாரிகளே தெரிவுக்குழுவில் சாட்சியம் அளித்ததாக ஜனாதிபதி காட்டம்

*சேவையிலுள்ள பாதுகாப்பு அதிகாரிகளை சாட்சியமளிக்க  அனுமதிக்கப்போவதில்லை என்றும் தெரிவிப்பு

பாராளுமன்ற தெரிவுக்குழுவினால் புலனாய்வு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு அரச புலனாய்வு தகவல்கள் ஊடகங்களின் முன்னிலையில் வெளிப்படுத்தப்படுவதனை தாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை என ஜனாதிபதி தெரி வித்தார்.

இதுவரையில் தெரிவுக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டவர்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்ட அதிகாரிகள் என்பதோடு, தற்போது சேவையிலுள்ள பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எவ ரையும் தெரிவுக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்க அனுப்பப் போவதில்லை என தெரிவித்த அவர், அவர்களது செயற்பாடுகள் தொடர்பான பொறுப்பினை தானே ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி களுடனான மாதாந்த கூட்டத்தின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைக் குறிப்பிட்டார்.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பான ஐந்து வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டுவரும் பின்னணியில் தெரிவுக்குழுவொன்றினை நியமித்து விசாரணை செய்தல் உச்ச நீதிமன்றத்தின் செயற்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என சட்ட மாஅதிபர் தனக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளதாகவும் நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் தான் அதனை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் ஜனாதிபதி ஒருவரினால் சமர்ப்பிக்கப்படும் அத்தகைய கடித ஆவணங்கள் பாராளுமன்ற அமர்வின் தொடக்கத்திலேயே சம்பிரதாயபூர்வமாக சபாநாயகரினால் முன்வைக்கப்படுகின்ற போதிலும் சபாநாயகர் இவ்விடயம் குறித்து பாராளுமன்றத்தில் எதுவித கருத்துக்களையும் வெளியிடாமை தொடர்பில் தான் வருத்தமடைவதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

பொலிஸ் திணைக்கள தலைமையகக் கட்டிடத்தினை நிர்மாணிப்பதற்கு ஜாவத்த பிரதேசத்திலுள்ள சலுசல தலைமை அலுவலகத்திற்கு சொந்தமான காணியை பொலிஸ் திணைக்களத்திற்கு கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததோடு, அரசாங்கத்திற்கு சுமையாக காணப்படுகின்ற, உரிய முறையில் இயங்காத சலுசல பணிப்பாளர் சபையை கலைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.

பொலிஸ் அதிகாரிகளின் பதவியுயர்வுகள் தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதோடு, அப்பதவியுயர்வுகள் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் தற்போது சம்பள ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களது அனுமதியையும் பெற்றுக்கொண்டதன் பின்னர் வெகுவிரைவில் 03 பிரிவுகளின் கீழ் குறித்த பதவியுயர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு புதியதொரு படையணியொன்றினை இணைத்துக் கொள்வதற்கான அனுமதியையும் ஆயுதங்களையும் பெற்றுக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், நச்சுத்தன்மையான போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது.

21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பான தேடுதல் நடவடிக்கைகளின்போது உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 25 இலட்சம் ரூபாய் நிதி அன்பளிப்பினை ஜனாதிபதி இதன்போது வழங்கினார்.

அத்தோடு சாய்ந்தமருது பிரதேசத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடம் பற்றிய தகவல்களை வழங்கிய முஸ்லிம் இனத்தவர்கள் மூவருக்கு தலா 10 இலட்சம் ரூபாய் நிதி அன்பளிப்பினையும் ஜனாதிபதி இதன்போது வழங்கினார்.

 

Sat, 06/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை