வாகனங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க தீர்மானம்

வீதி விபத்துக்கள்

பாதசாரிகள் மீது விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு தப்பிச்செல்லும் வாகனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க தீர்மானித்துள்ளோம் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். அத்தோடு வாகன காப்புறுதி நிறுவனங்கள் மூன்றாம் தரப்பினரின் காப்புறுதிகள் மூலம் பெற்றுக்கொள்ளும் வருமானத்தில் வீதி பாதுகாப்பு

அதிகார சபைக்கு வழங்கும் நிதியானது ஒரு வீதத்திலிருந்து இரண்டு வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது விபத்துகள் மூலம் பாதிப்புக்குள்ளான 27 பேருக்கு 40 இலட்சம் ரூபா இழப்பீடும் அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டது.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

வீதி பாதுகாப்புத் தொடர்பிலான தேசிய சபை எதிர்காலத்தில் ஒரு ஆணைக்குழுவாக மாற்றியமைக்கப்படும். வீதி பாதுகாப்புத் தொடர்பிலான தேசிய சபையின் சேவையை விரிவாக்கும் நோக்கிலே அதனை ஒரு ஆணைக்குழுவாக மாற்றியமைக்க தீர்மானித்துள்ளோம். அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வீதி பாதுகாப்புக்காக உரிய தீர்மானங்களை எடுப்பதில் நான் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை. விபத்துக்கு உள்ளானவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கும் வரை மனித நேயம் வளர்ச்சியடைய வேண்டும். அப்போதுதான் ஒரு சாரதி மனிதராகுவார். வீதி பாதுகாப்புக்காக பாரிய வேலைத்திட்டங்கள் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும். பாதுகாப்பான போக்குவரத்துச் சேவையே எமக்கு அவசியமாகவுள்ளது.

அதன் ஒரு கட்டமாக சொகுசு பஸ்கள் மாத்திரமே எதிர்காலத்தில் போக்குவரத்து சபைக்கு கொண்டவர நடவடிக்கையெடுக்கப்படும். சில வர்த்தகர்கள் இதனை எதிர்க்கின்றனர். என்றாலும், மக்களுக்காக உரிய தீர்மானத்தை எடுக்க நான் பின்நிற்கப் போவதில்லை. வாகன காப்புறுதி நிறுவனங்கள் மூன்றாம் தரப்பினரின் காப்புறுதி மூலம் பெற்றுக்கொள்ளும் வரு மானத்தில் வீதி பாதுகாப்பு அதிகார சபைக்கு வழங்கும் நிதியானது ஒரு வீதத்திலிருந்து இரண்டு வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் பாதசாரிகள் மீது விபத்துகளை சம்பவித்துவிட்டு தப்பிச்செல்லும் வாகனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் இழப்பீட்டுத்தொகையையும் அதிகரிக்க நடவடிக்கையெடுக்கப்படும் என்றார்.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 06/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை