இங்கிலாந்து வீரர்களின் சதங்கள் வீண்

பாகிஸ்தானுக்கு திரில் வெற்றி

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் ஆறாவது போட்டியில் பாகிஸ்தான் இங்கிலாந்து அணியை 14 ஓட்டங்களால் தோற்கடித்தது.

உலகக் கிண்ண லீக் ஆட்டங்களில் ஒன்றாக அமைந்த இந்தப் போட்டி, நொட்டிங்ஹம் ட்ரென்ட் பிரிட்ஜ் நகரில் நேற்று முன்தினம் (3) ஆரம்பமானது.

நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் மோர்கன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை பாகிஸ்தான் அணிக்காக வழங்கியிருந்தார்.

இந்த உலகக் கிண்ணத்தொடரினை தென்னாபிரிக்க அணியுடனான வெற்றியுடன் ஆரம்பித்த இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிரான இப்போட்டியில் ஒரு மாற்றத்தை மேற்கொண்டிருந்தது.

அந்தவகையில், தென்னாபிரிக்க அணியுடனான போட்டியில் விளையாடிய லியம் பிளங்கெட்டிற்கு பதிலாக மார்க் வூட் இங்கிலாந்து அணியில் சேர்க்கபட்டிருந்தார்

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தோல்வியுடன் ஆரம்பித்த பாகிஸ்தான் அணி இரண்டு மாற்றங்களை மேற்கொண்டிருந்தது.

பாகிஸ்தான் அணியில் சுஐப் மலிக் மற்றும் ஆசிப் அலி ஆகியோர் இமாத் வஸீம் மற்றும் ஹாரிஸ் சொஹைல் ஆகியோரின் இடத்தினை இப்போட்டியில் எடுத்திருந்தனர்.

பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வந்த பக்கார் சமான் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோர் நல்ல தொடக்கத்தினை வழங்கினர். எனினும், இந்த நல்ல தொடக்கத்திற்கு இங்கிலாந்து அணியின் சுழல் வீரரான மொயின் அலி முற்றுப்புள்ளி வைத்தார். அந்தவகையில், பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட்டாக ஓய்வறை நடந்த பக்கார் சமான் 40 பந்துகளில் 6 பெளண்டரிகள் அடங்கலாக 36 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

பின்னர் பாகிஸ்தான் அணியின் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான இமாம்-உல்-ஹக் இரண்டாம் விக்கெட்டாக ஆட்டமிழந்து 58 பந்துகளில் 3 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 44 ஓட்டங்களை குவித்தார்.

இவர்கள் இருவரின் விக்கெட்டையும் அடுத்து பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்திற்கு மொஹமட் ஹபீஸ், அணித்தலைவர் சர்பிராஸ் அஹ்மட், பாபர் அசாம் ஆகியோர் தாம் பெற்ற அரைச்சதங்களுடன் நிலைத்து ஆடினர்.

இவர்களில் மொஹமட் ஹபீஸ் ஒருநாள் போட்டிகளில் தனது 38ஆவது அரைச்சதத்துடன் 62 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 8 பெளண்டரிகள் அடங்கலாக 84 ஓட்டங்களை குவித்தார். பாபர் அசாம் ஒருநாள் போட்டிகளில் தனது 13ஆவது அரைச்சதத்துடன் 63 ஓட்டங்கள் பெற்றிருக்க, பாகிஸ்தான் அணித்தலைவர் சர்பிராஸ் அஹ்மட் ஒருநாள் போட்டிகளில் பெற்ற 11ஆவது அரைச்சதத்துடன் 55 ஓட்டங்களை பெற்றார்.

தொடர்ந்து பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்த போதிலும் இந்த மூன்று வீரர்களின் அரைச்சதங்கள் சவாலான ஓட்டங்களை பெற உதவியாக இருந்தது. அதன்படி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்த பாகிஸ்தான் அணி 348 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பாக கிறிஸ் வோக்ஸ், மொயின் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் பதம்பார்க்க, மார்க் வூட் 2 விக்கெட்டுக்களை பதம் பார்த்திருந்தார்

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட சவாலான 349 ஓட்டங்களை அடைய இங்கிலாந்து அணி தமது பதில் துடுப்பாட்டத்தை ஜேசன் ராய், ஜொன்னி பெயர்ஸ்டோவ் ஆகியோருடன் ஆரம்பித்தது.

இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக வந்த ஜேசன் ரோய் 8 ஓட்டங்களை மாத்திரமே பெற்று ஏமாற்ற, மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜொன்னி பெயர்ஸ்டோவ் 32 ஓட்டங்களை பெற்றார்.

இதன் பின்னர் களம் வந்த இங்கிலாந்து அணித்தலைவர் இயன் மோர்கன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும் ஜொலிக்க தவறினர். இதில் மோர்கன் 9 ஓட்டங்களை மாத்திரம் பெற, பென் ஸ்டோக்ஸ் 13 ஓட்டங்களை எடுத்தார்.

இப்படியாக தமது முக்கிய துடுப்பாட்ட வீரர்களை இழந்த இங்கிலாந்து அணி தமது வெற்றி இலக்கினை எட்டும் பயணத்தின் போது ஒரு கட்டத்தில் 118 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. இத்தருணத்தில் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் இங்கிலாந்து அணியின் ஐந்தாம் விக்கெட்டுக்காக சிறந்த இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கினர். இதேநேரம் இந்த இணைப்பாட்டத்திற்குள் ஜோ ரூட் ஒருநாள் போட்டிகளில் தான் பெற்ற 15ஆவது சதத்தினையும் பதிவு செய்தார்.

பின்னர் 130 ஓட்டங்கள் வரையில் நீடித்த இந்த இணைப்பாட்டம் ஜோ ரூட்டின் விக்கெட்டோடு முடிவுக்கு வந்தது. சதாப் கானின் சுழலில் வீழ்ந்த ஜோ ரூட் 104 பந்துகளில் 10 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 107 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

ஜோ ரூட்டினை அடுத்து ஜோஸ் பட்லரும் இங்கிலாந்து அணிக்காக சதம் பெற்றார். எனினும், ஜோஸ் பட்லரின் இந்த சதம் இங்கிலாந்து அணிக்கு வெற்றியினை சுவைக்க உதவியாக இருக்கவில்லை. அதன்படி, இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 334 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியினை தழுவியது.

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில் போராட்டம் காண்பித்திருந்த ஜோஸ் பட்லர் ஒருநாள் போட்டிகளில் தான் பெற்ற 8ஆவது சதத்தோடு வெறும் 76 பந்துகளில் 9 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 103 ஓட்டங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. மறுமுனையில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பில் வஹாப் ரியாஸ் தனது வேகம் மூலம் 3 விக்கெட்டுக்களை சாய்க்க, சதாப் கான் மற்றும் மொஹமட் அமீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தனர். போட்டியின் ஆட்ட நாயகன் விருதினை பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரரான மொஹமட் ஹபீஸ் பெற்றுக் கொண்டார்.

Wed, 06/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை