அமைச்சு பதவியை கபீர் ஹாசிம் மீண்டும் ஏற்க வேண்டும்

அமைச்சர் சஜித் வேண்டுகோள்

 இலங்கையில் புதிய அரசியல் எதிர்காலத்தை உருவாக்வாக்குவதற்கு கபீர் ஹாசிம் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டு அமைச்சரவையில் அங்கம் வகிக்க முன்வர வேண்டுமென அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.

கபீர் ஹாசிம் போன்ற நிபுணத்துவம் நிறைந்த அரசியல் தலைவர்கள் தொடர்ந்தும் நிழலில் இருப்பதற்கான காலம் இதுவல்ல. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சிரேஷ்ட தலைவர்கள் முன்நின்று

உழைக்க முன்வர வேண்டுமெனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது:

அரசியல்வாதிகளை சுயநலவாதிகளாகவும், அதிகாரத்துக்கு ஆசைப்பட்டவர்களாகவும் பார்க்கும் நிலையில், தனது சமூகத்தின் ஒற்றுமையைக் காண்பிக்கும் நோக்கில் கபீர்ஹாஷிம் தனது அமைச்சுப் பதவியை தியாகம் செய்திருந்தார்.

அடிப்படைவாதம் அல்லது எந்தவிதமான தவறான செயற்பாடுகள் குறித்தும் அவர் குற்றஞ்சாட்டப்படவில்லை.

இருந்தபோதும் ஏனைய அமைச்சர்களுடன் இணைந்து தனது சமூகத்துக்கான ஒற்றுமையை வௌிப்படுத்த அவர், தனது பதவியை தியாகம் செய்திருந்தார்.

முஸ்லிம், சிங்கள மற்றும் தமிழ் வாக்காளர்களால் தெரிவுசெய்யப்படும் தலைவராக கபீர் ஹாசிம் காணப்படுகின்றார். கேகாலை மாவட்டத்தில் சகல மதத்தவர்களின் வாக்குகளும் அவருக்குக் கிடைத்துள்ளன.

2010ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சிக்கு 60 உறுப்பினர்கள் மாத்திரமே தெரிவாகியிருந்தனர்.

இச்சந்தர்ப்பத்தில் கபீர் ஹாசிமும் தனது தேர்தல் தொகுதியில் வெற்றிபெற்று மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தி கட்சிக்குப் பெருமை சேர்த்திருந்தார்.

இவ்வாறான நிலையில் கபீர் ஹாசிமை மீண்டும் அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொள்ளுமாறு கோரி கேகாலை மாவட்டத்தில் போராட்டமொன்றும் நடத்தப்பட்டது. அங்குள்ள மக்கள் அவர் மீது இன்னமும் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதையே இது பறைசாற்றுகிறது. கபீர் ஹாசிம் போன்ற அனுபவம் வாய்ந்த, துறைசார் கல்வியாளர்களே இந்த நாட்டுக்கு அவசியம்.

நாட்டில் பல்வேறு அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கும் மக்களை கலாசார ரீதியில் ஒன்றிணைக்கவும் மீண்டும் அமைச்சுப் பதவியை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவரைப் போன்றவர்களே கட்சிக்கும் அவசியம் என ஐ.தே.கவின் பிரதித் தலைவர் என்ற ரீதியில் கூறிக் கொள்வதாகவும் தெரிவிப்பதாக அதில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Mon, 06/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை