முஸ்லிம்கள் இந்த நாட்டில் மட்டும்தான் சிறுபான்மை; உலகில் பெரும்பான்மை இனம்

முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்

முஸ்லிம்கள் இந்த நாட்டில் மட்டும் தான் சிறுபான்மை ஆனால் உலகத்தில் பெரும்பான்மையினர் என்பதை மிகத் தெளிவாகக் சொல்லிக் கொள்கிறோம். இலகுவாக எம்மை அடக்கி ஒடுக்கி வைக்க முடியும் என்று யாரும் நினைத்துவிடக் கூடாது என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தானகுடி ஜாமியுழ்ழாபிரீன் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இலகுவாக எம்மை அடக்கி ஒடுக்கி வைக்க முடியும் என்று யாரும் நினைத்துவிடக் கூடாது.

எங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரை நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தேர்தல் வருகின்ற வேளையில் அதனை வெளிப்படுத்த வேண்டும்.

எங்களுடைய ஒற்றுமை என்பது சாதாரணமானது அல்ல. வடக்கு கிழக்கில் இருக்கின்ற எங்களுடைய இராஜினாமா என்பது பெரியது அல்ல. முன்னாள் அமைச்சர்களான கபீர் காசிம், ரவும் ஹக்கீம் போன்ற தலைவர்களின் பதவி விலகல்கள் பெரியது. அவர்கள் சிங்கள மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றவர்கள். அவர்கள் முஸ்லிம்களின் உரிமைகளுக்காகவும் பாதுகாப்புக்காவும் ஒற்றுமையாக எடுத்துள்ள முடிவு இது.

எங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகள் முரண்பாடுகளை மறக்க வேண்டும். நாங்கள் மிகத் தெளிவாக இருக்கின்றோம். என்ன பிரச்சினைகள் வந்தாலும் அவற்றுக்கு முகம் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.

நான் ஜனாதிபதியிடம் இரண்டு வார கால அவகாசம் கொடுத்திருக்கிறேன். என்மீதான குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட்டு நிரூபிக்கப்பட வேண்டும். அப்பட்டமான பொய்களை பௌத்த துறவிகள் தலதா மாளிக்கைக்கு முன்னால் சொல்லி நாட்டு மக்களையும் நாட்டையும் ஏமாற்றினார்கள் என்ற செய்தியை நாம் இந்த மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

கிழக்கு மாகாண ஆளுநர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்த பின்னர் முதன் முதலாக தனது சொந்த ஊருக்கு விஜயம் செய்த ஹிஸ்புல்லாஹ் மக்கள் மத்தியில் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

 

Mon, 06/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை