பெருந்தோட்டங்களை சார்ந்தவர்களுக்கும் சமுர்த்தி நிவாரணம்

கிடைக்காதவர்கள் மேன்முறையீடு செய்யலாம்

பெருந்தோட்டங்களை சார்ந்தவர்களும் இம்முறை சமுர்த்தி உதவுதொகை பெற தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எனவே இதுவரையும் கிடைக்காதவர்கள் வருகின்ற 30 ஆம் திகதிக்கு முன்னர் மேன்முறையீடு செய்து சமுர்த்தி உதவிகளை பெற்றுக் கொள்ள முடியும் என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

'புதிதாய் சிந்திப்போம், தன்னம்பிக்கையுடன் முன்னேறுவோம்' என்ற தொனிப்பொருளில் வறிய குடும்பங்களை சேர்ந்த ஆறு இலட்சம் பேருக்கு சமுர்த்தி உதவிகள் வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் பதுளை வில்ஸ்பார்க் மைதானத்தில் நடைபெற்ற சமுர்த்தி உதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

சமுர்த்தி உதவிகள் இதுவரை காலமும் மலையக மக்களுக்கு ஒரு எட்டாகனியாகவே இருந்துவந்தது. மலையக மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருந்தாலும் அவர்களுக்கான சமுர்த்தி உதவிகள் வழங்கப்படவில்லை. தற்போது உள்ள புதிய நடைமுறைக்கு அமைய பெருந்தோட்டங்களை சார்ந்தவர்களுக்கும் சமுர்த்தி உதவிகள் வழங்க முடியும். தற்போது நாட்டில் 06 இலட்சம் பேருக்கு புதிய சமூர்த்தி உதவிகள் வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதில் பெருந்தோட்டங்களை சார்ந்தவர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர். இதுவரை காலமும் கிடைக்காதவர்கள் இம்மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் மேன்முறையீடு செய்து அதனை பெற்றுக் கொள்ளலாம். அதற்கான விண்ணப்பங்கள் பிரதேச சமுர்த்தி உத்தியோகஸ்தர்களிடம் பெற்றுக் கொள்ளலாம். சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள். கவனமாக இருந்து உரியவர்களுக்கு சமுர்த்தி கிடைக்க செய்ய வேண்டும். சில சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் இதனை முறையாக நடைமுறைப்படுத்தமையே உரியவர்களுக்கு சமுர்த்தி கிடைக்கமைக்கான காரணம். இதனை தொடர்ந்தும் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. நாங்களும் களத்திற்கு சென்று உரியவர்களுக்கு சமுர்த்தி கொடுக்கப்பட்டு உள்ளதா என்று பரிசோதித்துள்ளோம். எனவே இதனை கவனத்திற்கொண்டு கிராம மக்களுக்கு சமுர்த்தி கிடைப்பது போல் பெருந்தோட்ட மக்களுக்கும் கிடைக்க அனைவரும் செயற்பட வேண்டும் அதேபோல் தொகுதிவாரியாக உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவான உறுப்பினர்கள் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி உரியவர்களுக்கு சமுர்த்தி உதவிகள் கிடைக்க உதவி வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே கலந்துக் கொண்டார். கௌரவ அதிதிகளாக வெளிநாட்டு வேலைவாய்பு டிஜிட்டல் தொலைதொடர்பு, விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் உட்பட பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்தகுமார், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் உறுப்பினர்கள் சமுர்த்தி பயனாளிகள் ஆகியோர் இதில் கலந்துக் கொண்டனர்.

பதுளை மாவட்டத்தில் சுமார் 23306 பேருக்கு சமுர்த்தி உதவிகள் இதன்போது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tue, 06/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை