ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பொது இடங்களில் பேசவேண்டாம்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அல்லது பொது வேட்பாளர் தொடர்பில் கட்சி உரிய தீர்மானம் எடுக்கும்வரை எவரும் பொதுஇடங்களில் பெயர்களை வெளியிட வேண்டாமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடியது.

இதன்போது அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் முக்கிய தலைவர்களால் சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

வெற்றி வேட்பாளரை ஐ.தே.க. இம்முறை களமிறக்க வேண்டுமென பல முக்கிய தலைவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அனைவரது ஆலோசனைகளையும் கேட்டுக்கொண்ட கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, பொது வேட்பாளர் அல்லது அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சி தீர்மானம் எடுக்கும் வரை பெயர்களை பொது மேடைகளில் வெளிப்படுத்த வேண்டாம் .

செப்டெம்பரில் கட்சியின் மாநாட்டின் போதே வேட்பாளர் குறித்த அறிவிப்பை வெளியிடும்வரை எவரும் பெயர்களை வெளிப்படுத்த வேண்டாமென பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, ஐ.தே.க. அரசுக்கு பாராளுமன்றத்தில் ஆதரவு வழங்கிய சு.கவின் உறுப்பினர்கள் மற்றும் சில கட்சிகளின் தலைவர்களுக்கு ஐக்கிய தேசிய முன்னணியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளை வழங்க வேண்டுமென சிலர் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜிதமுனி சொய்சாவுக்கு கட்டான தொகுதி அமைப்பாளர் பதவியும், அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு மஹரகம தொகுதி அமைப்பாளர் பதவியும் வழங்கப்பட வேண்டுமென் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. என்றாலும் அதற்கு சில முக்கிய உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் ஐ.தே.கவில் தெரிவாகி சுயேற்சை உறுப்பினராகச் செயற்படும் ஊவா மாகாண சபை உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியின் கட்சி உறுப்புரிமையை நீக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர் நலின் பண்டார, ஐ.தே.கவின் உறுப்பினர் ஒருவரே ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என்பதுடன், அவர் அனைத்து பங்காளிக் கட்சிகளினதும் ஆதரவுடனே களமிறக்கப்படுவார் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 06/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை