ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டங்களை அடுத்து அரச அலுவலகங்கள் பூட்டு

பல தசாப்தங்களுக்குப்பின் ஹொங்கொங்கில் நிகழ்ந்த மிக மோசமான வன்முறை சம்பவங்களை அடுத்து அங்கிருக்கும் சில அரசு அலுவலங்களை அதிகாரிகள் மூடியுள்ளனர்.

நேற்றுக் காலை முதல், மிகப்பெரிய அளவிலான கூட்டம் ஹொங்கொங் அரசு அலுவலகங்களை சுற்றி சிதற ஆரம்பித்துள்ளனர். கடந்த புதனன்று இந்த பகுதியில் பொலிஸ் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் வெடித்தது.

ஹொங்கொங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபரை தாய்வான், சீனாவிடம் ஒப்படைக்கும் திட்டத்துக்கு எதிராகவே இந்தப் போராட்டம் வெடித்துள்ளது.

ஆனால், இந்தச் சட்ட திருத்தத்தை செய்யும் முடிவிலிருந்து இதுவரை ஹொங்கொங் பின்வாங்கவில்லை.

புதனன்று சட்டமன்ற கவுன்சில் வளாகத்துக்கு அருகேயுள்ள முக்கிய வீதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியதை தொடர்ந்து, போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் ரப்பர் குண்டுகளையும், கண்ணீர் புகை குண்டுகளையும் பயன்படுத்தினர்.

இந்த வன்முறை சம்பவத்தில், 15 முதல் 66 வயதுக்குட்பட்டவர்களில் 72 பேர் காயமடைந்துள்ளனர். அதில் இருவர் அபாய கட்டத்தில் உள்ளனர்.

கொலை செய்வது, பாலியல் வல்லுறவு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் சந்தேக நபர்களை சீனா, தாய்வான், மக்காவுவில் உள்ள அதிகாரிகள் ஒப்படைக்கும்படி கோரிக்கை வைத்தால், ஹொங்கொங் அவர்ளை ஒப்படைப்பதற்கு வழிவகை செய்யும் விதமாக ஹொங்கொங் அரசின் தலைவர் கேரி லாம் முன்மொழிந்துள்ள சட்டதிருத்தம் உள்ளது.

இந்த கோரிக்கைகள் குறித்து ஒவ்வொரு விவகாரத்துக்கு தனித்தனியாக முடிவெடுக்கப்படும்.

ஹொங்கொங்கில் ஜனநாயகம் கோரி 2014ஆம் ஆண்டு நடந்தப்பட்ட குடை போராட்டத்திற்கு பின் இப்போது நடக்கும் போராட்டம்தான் மிகவும் பெரியது.

கொலை, பாலியல் வல்லுறவு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கும் நபர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சீனா, தாய்வான் கோரினால் அவர்களிடம் அந்த நபர்களை ஒப்படைக்க இந்த சட்டத் திருத்தம் அனுமதிக்கிறது. ஆனால், இந்த சட்டம் மூலமாக அரசியல் ரீதியாக எதிராக இருப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என மக்கள் கருதுகிறார்கள்.

ஆனால், ஹொங்கொங் நீதித்துறையிடம்தான் முழு அதிகாரம் இருக்கும். அரசியல், மத ரீதியான குற்றங்கள் புரிந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் சீனாவிடம் ஒப்படைக்கப்பட மாட்டார்கள் என ஹொங்கொங் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

போராட்டம் தீவிரமாக நடந்தாலும் இந்த சட்ட திருத்தத்தை மேற்கொள்ள ஹொங்கொங் தீவிரமாக உள்ளது.

அதே நேரம், இரண்டாவது முறையாக இந்த சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்ட போது ஹொங்கொங் சட்டமன்றம் இதனை தாமதப்படுத்தி உள்ளது.

சீன ஆதரவு சட்டப்பேரவை, புதன்கிழமை நடப்பதாக இருந்த கூட்டத்தை நாள் குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

பிரிட்டனின் காலனி நாடாக இருந்த ஹொங்கொங், 1997ஆம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட பின் ஒரு தேசம், இரண்டு அமைப்பு முறைகளை கொண்டு இயங்கி வருகிறது.

ஹொங்கொங்கிற்கு என்று தனிச்சட்டம் உள்ளது. சீன மக்களுக்கு கிடைக்காத ஜனநாயக சுதந்திரம் ஹொங்கொங் மக்களுக்கு உள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 20 நாடுகளுடன் ஹொங்கொங் குற்றவாளிகளை ஒப்படைக்கும் சட்டத்தை போட்டுள்ளது. ஆனால், அது போன்ற சட்ட ஒப்பந்தமும் சீனாவுடன் இல்லை. இருபது ஆண்டுகளாக இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

Fri, 06/14/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக