பிரதமர் மோடி நாளை வருகை

இந்தியப் பிதமர் நரேந்திர மோடி நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கை வருகின்றார். சுமார் நான்கு மணி ​நேரம் மட்டுமே கொழும்பில் தங்கியிருக்கும் அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் செங்கம்பளத்துடன் கூடிய மகத்தான வரவேற்பளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடனான சந்திப்புகளின்போது அடிப்படைவாத பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பில் விரிவாக ஆராய்வாரென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்களுக்குப் பின்னர் இந்தியப் பிரதமர் மோடி இலங்கை வருவதானது நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்திருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி கொழும்பில் தங்கியிருக்கும் காலத்திற்குள் இரு நாடுகள் தொடர்பான பலதரப்பட்ட விடயங்கள் ஆராயப்படுகின்றபோதும் அடிப்படைவாத பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலை பிராந்தியத்திலிருந்து நீக்குவது தொடர்பான கலந்துரையாடல்களுக்கே முன்னுரிமையளிக்கப்படுமென இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்முறை இந்திய இல்லத்துக்கு விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மோடியை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் சந்திக்க ஏற்பாடாகியுள்ளது. இதேவேளை அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழர் முற்போக்கு கூட்டணி, எம்.பி ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் அமைச்சர்களும் பிரதமர் மோடியை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் கோரியிருப்பதாக தெரியவந்துள்ளது.

காலை 11 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் பிரதமர் மோடியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று வரவேற்பார்.

லக்ஷ்மி பரசுராமன்

 

Sat, 06/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை