விபுலானந்தா கல்லூரிகளுக்கிடையிலான கிரிக்கெட் சமர்

திருமலை மண்ணின் வரலாற்றில் முதன் முறையாக திருகோணமலை விபுலானந்தா கல்லூரி மற்றும் உவர்மலை விவேகானந்தா கல்லூரி 'ஆகியவற்றுக்கு இடையிலான முதலாவது'விவியன்ஸ்' பெட்ல்' ( விவியன் சமர்) என பெயரிடப்பட்ட கிரிக்கெட் சமர் கடந்த சனிக்கிழமை (22 ம் திகதி) திருகோணமலை விபுலானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

விளையாட்டின் ஊடாக குறித்த இரு பாடசாலைகளினது ஆசிரியர்கள், மாணவர்களிடையே வலுவான தொரு புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்ப வேண்டும் என்றநோக்குடன் இரு பாடசாலைகளின் அதிபர்களினதும் பழைய மாணவர்களினதும் முயற்சியின் காரணமாக இப்போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய விபுலானந்தா அணி 30.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 74 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. தனது அணிக்காக எம்.ஆர். சிஹாத் 15 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய விவேகானந்தா அணியினர் 11.2 ஓவர்களில் இரண்டு விக்கட்டுக்களை இழந்து 76 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.எனவே விவேகானந்தா அணி 8 விக்கட்டுக்களால் முதலாவது மாபெரும் சமரில் வெற்றியணியாகியது. பீ. துசிதன் 22 ஓட்டங்களையும் வீ.தமிழ்ச்செழியன் 17 ஓட்டங்களையும் ஏ.மிதுர்ஷன் 15 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

விவேகானந்தா அணியைச் சேர்ந்த எஸ்.சதுஷன் பத்து (10) ஓவர்கள் பந்து வீசி நான்கு (04) ஓட்டமற்ற ஓவர்களுடன் பதினைந்து (15) ஓட்டங்களைக் கொடுத்து நான்கு (04) விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

திருமலை மண்ணின் வரலாற்றில் முதன் முறையாக நடைபெற்ற இச்சமரில் விவேகானந்தா பாடசாலை அணி சம்பியன் கிண்ணத்தையும் விபுலானந்தா பாடசாலை அணி'ரன்னர்ஸ் அப்' (இரண்டாம் இடம்) கிண்ணத்தையும் பெற்றுக்கொண்டன. மேலும்,சிறந்த வீச்சாளருக்கான விருதை விவேகானந்தா பாடசாலை அணியைச் சேர்ந்த எஸ்.சதுஷனும் சிறந்ததுடுப்பாட்ட வீரருக்கான விருதை விவேகானந்தா அணியின் பீ.துசிதனும் ஆட்டநாயகனுக்கான விருதை விபுலானந்தா அணியைச் சேர்ந்த எம்.ஆர். சிஹாத்தும் பெற்றுக்கொண்டனர். விவேகானந்தா அணியின் பயிற்றுவிப்பாளராக கபி.கஜனும் விபுலானந்தா அணியின் பயிற்றுவிப்பாளர்களாக ஆர்.ராம்கி மற்றும் ஆர். கீர்த்தீபன் ஆகியோர் செயற்படுகின்றனர்.

இப்போட்டியில் இரு அணிகளும் அதிக எண்ணிக்கையான ஓட்டங்களைபெற்றுக் கொள்ளாவிட்டாலும் ஒரு சிறப்பான,சுறுசுறுப்பான ஆட்டமாக அனைவரையும் மகிழ்ச்சி ஆரவாரத்துக்கு உள்ளாக்கியது.

இரு பாடசாலை அணிகளுக்கிடையே நட்புரீதியான இவ்வாறான போட்டி வருடாந்தம் நடாத்தப்பட வேண்டும் என்ற தனது நீண்டநாள் கனவு இன்று நிறைவேறியுள்ளதென விபுலானந்தா கல்லூரி அதிபர் ஆர்.எஸ். ஜெரோம் தெரித்தார்.

சிநேகபூர்வமான இக் கிரிக்கெட் சமர் தொடர்ந்து நடைபெறுவதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்குவதாக விவேகானந்தா கல்லூரி அதிபர் கே. ரவிதாஸ் கூறினார்.

திருகோணமலை குறூப் நிருபர்

Wed, 06/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை