ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் உறுதியேற்க வேண்டும்

அடிப்படைவாதத்தையும், பயங்கரவாதத்தையும் ஒழிப்பதற்கான உறுதிமொழியை முஸ்லிம் மக்கள் ரம்ழான் பண்டிகையில் உறுதியேற்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

மூவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக தமது பதவிகளை இராஜனாமாச் செய்த முஸ்லிம் தலைவர்கள் அடிப்படை

வாதத்திற்கு எதிராகவும் கூட்டாகச் செயற்பட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

கொழும்பு, மருதானையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் எதிர்க்கட்சியிலிருந்து அரசியல் இலாபம் தேடாது பொறுப்புடைய கட்சியாக நடந்துக்கொண்டுள்ளோம். மீண்டும் பயங்கரவாதம் தலைத்தூக்காத வண்ணம் செய்ய வேண்டிய சட்டத்திருந்தங்கள் தொடர்பிலான பணிகளை ஆரம்பித்தோம்.

‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்ற அடிப்படையில் தேசிய பாதுகாப்புக்குத் தேவையான சட்டத்திருத்தங்களை அனைத்துக் கட்சியினரின் ஆதரவுடன் செய்து வருகின்றோம்.

நாம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளின் பிரகாரம் பெரும்பாலான சட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

முகத்தை முழுமையாக மறைக்காமலிருக்கும் (புர்கா ) யோசனைக்கு அமைச்சரவையில் இணக்கம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல், தேசிய பாதுகாப்புத் தொடர்பிலான துறைசார் மேற்பார்வைக் குழுவிலும் பல சட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இனங்களுக்கிடையில், முரண்பாடுகளை தோற்றுவிக்கும் கருத்துகளைப் பகிர்வது, திருமண வயது, மதஸ்தலங்களை அமைத்தல், கல்வி முறைமை உட்பட பல விடயங்களை அனைவருக்கும் பொதுவான சட்டம் இருக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இந்தச் சட்டங்கள் வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

அத்துடன், ஐ.தே.க. அரசு செய்துவரும் ஊழல்களையும் எதிர்காலத்தில் வெளிப்படுத்தவுள்ளோம். 6 இலட்சம் பேருக்கு சமுர்த்தியை வழங்குவதற்காக 7ஆயிரம் இலட்சம் நிதியை வீணக்கடிக்கின்றனர். இது மக்களின் பணமாகும்.

மின்சாரத்தை கொள்வனவு செய்வதிலும் ஊழல் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. எதிர்காலத்தில் உரிய சாட்சியங்களுடன் இவற்றை அம்பலப்படுத்துவோம்.

மூன்று பேர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டால் அனைத்து முஸ்லிம் தலைவர்களும் பதவியை இராஜனாமாச் செய்து தமது ஒற்றுமையை காட்டியுள்ளனர்.

அதேபோன்று பயங்கரவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் ஒழிப்பதற்கும் அவர்கள் கூட்டாக ஆதரவளிக்க வேண்டும்.

இனவாதம், மதவாதம் தலைத்தூக்குவதை தடுப்பதற்கு எதிராகவும் அவர்கள் ஒன்றிணைந்துச் செயற்பாட வேண்டும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Thu, 06/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை