காத்தான்குடியில் தௌஹீத் ஜமாஅத்தும் பொலிஸாரும் இணைந்து செயற்பட்டனர்

அப்துல் ராசிக் என்பவரை இன்னும் கைது செய்யாததில் மர்மம்

சஹ்ரான் தொடர்பில் 2013 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக முறைப்பாடுகளைச் செய்துவந்த போதும் மாறிமாறி ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்கத் தவறியதாலேயே நாடு பாரியதொரு அனர்த்தத்துக்கு முகங்கொடுக்கவேண்டி ஏற்பட்டதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்தார்.

அகில இலங்கை தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் அப்துல் ராஸிக் என்பவர் கைதுசெய்யப்படாமல் சுதந்திரமாக நடமாட அனுமதித்திருப்பது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்றும் அவர் குறிப்பிட்டார். ராஸிக்கை கைது செய்யக் கூடாது என ஆலோசனை வழங்குபவர்களே முழுமையான செயற்பாடுகளின் பின்னால் இருக்கின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல் தொடர்பாக

விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்னிலையில் நேற்றைய தினம் சாட்சியளிக்கும்போதே அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

சஹ்ரான் 2017ஆம் ஆண்டு காத்தான்குடியில் 120 வீடுகளை எரித்தார். எவரும் இவரைச் சென்று கைதுசெய்யவில்லை. அங்குள்ள மக்கள் வீதிகளில் இறங்கி போராடினர். கைதுசெய்ய முற்பட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை இடம்மாற்றினர். தௌஹீத் ஜமாஅத்தும், பொலிஸாரும் ஒன்றிணைந்து செயற்பட்டனர். பாரம்பரிய முஸ்லிம்கள் சென்று தெளஹீத் ஜம்அத் அமைப்புக்கு எதிராக முறைப்பாட்டைச் செய்யமுடியாது.

குண்டுத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் ஜனாதிபதி கிழக்கிற்குச் சென்றிருந்தார். அவருடன் நானும் சென்றிருந்ததுடன். அங்கு மல்வானை பகுதியில் தௌஹீத் ஜமா அத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் வீடொன்றை எடுத்து சட்டவிரோதமான முறையில் தொழுகைகளில் ஈடுபடுகின்றனர், அவர்களைப் பாரம்பரிய முஸ்லிம்கள் விரட்டியுள்ளனர்.

 இத்தொழுகையைத் தொடர்ந்து முன்னெடுக்க விடவேண்டாம். பிரச்சினைகள் அதிகரிக்கும் என ஜனாதிபதிக்குச் சுட்டிக்காட்டியதுடன், அங்கு எங்களுடனிருந்த பொலிஸ் மாஅதிபரிடம் கேட்டேன். பொலிஸ் மாஅதிபர் உடனடியாக சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரியைத் தொடர்புகொண்டு உரையாடினார். தொழுகை மேற்கொள்வதை எவ்வாறு தடுக்க முடியும். தொழுகையில் ஈடுபடுபவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க முடியும் என்றே அந்த அதிகாரி பதில் வழங்கியுள்ளார்.

சாதாரணமாக ஒருவர் வங்கியில் பெருந்தொகை பணத்தை வைப்பிலிட்டால் பல்வேறு கேள்விகள் கேட்கப்படும். எனினும், தௌஹீத் ஜம்அத் அமைப்புக்கு இந்தளவு பெருந்தொகை பணம் எங்கிருந்து வந்தது என்பது விசாரிக்கப்படவில்லை. அவர்களின் பள்ளிகள் சட்டரீதியற்றவை. சரியான அனுமதிகள் பெறப்படாதவையாகும்.

அப்துல் ராஸிக் ஏன் இன்னமும் கைதுசெய்யப்படவில்லை? நான் பதவி விலகுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதியைச் சந்தித்தபோதும் அப்துல் ராஸிக் என்பவரைப் பற்றிக் கூறினேன். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு குர்ஆனைப் பின்பற்றுகிறது என்றும் பக்தாதியின் பெயரைக்கூறும்போது தனது மயிர்கூச்செறிவதாகவும் கூறும் உரைகள் அடங்கிய வீடியோக்களைச் சுட்டிக்காட்டினேன்.

இது பற்றி ஜனாதிபதியிடம் கூறியதுடன், அப்போது அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் செனவிரட்னவுக்கு அழைப்பை எடுத்துக் கேட்டார். அந்தப் பக்கத்திலிருந்து ஏதோ பேசப்பட்டது அதன் பின்னர் எதுவும் கூறப்படவில்லை. அப்துல் ராஸிக்கை பிடிக்க போதிய சாட்சியம் இல்லையென இங்கு சாட்சியமளித்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கூறியிருந்தார். ராஸிக் தான் நீண்டகாலமாக புலனாய்வுத் தகவல்களை வழங்குபவர் என்பதால் அவரைக் கைதுசெய்யவேண்டாம் என எங்கிருந்தாவது கூறப்பட்டிருக்க வேண்டும்.

கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனையுடன் என்னைக் கைது செய்தனர். எனக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை. என்னை இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் வந்து சந்தித்தனர். எனக்கு 500 மில்லியன் ரூபாவை கொடுப்பதற்கு முன்வந்தனர். அதனைப் பெற்றுக் கொண்டு நாட்டைவிட்டுச் செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். 300 மில்லியன் ரூபாவைப் பெற்றுக் கொண்டு 200 மில்லியன் ரூபாவை அரசியலுக்குப் பயன்படுத்துமாறு கோரினர். இந்தப் பிரசாரத்திலிருந்து வெளியே இருக்குமாறு கோரினர். ராஸிக் போன்ற அடிப்படைவாதிகளுக்கு எதிரான பிரசாரத்தை கைவிடுமாறே கோரினார்கள்.

ஷரீஆ சட்டமே எம்மை வழிநடத்துகிறது. குறிப்பாக பள்ளி நிர்வாகம் வக்பு சபை போன்ற விடயங்கள் ஷரீஆ சட்டத்தின் கீழ் உள்ளன. முஸ்லிம் திருமண விவகாரமும் இதில் கூறப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

இதேவேளை, பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் வர்த்தமானி மூலம் வெளியிட்டிருக்கும் ஆடை பற்றிய சுற்றுநிருபத்தினால் முஸ்லிம்கள் அலுவலகங்களுக்குச் செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் அசாத் சாலி இங்கு சுட்டிக்காட்டினார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

 

 

Wed, 06/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை