விலை உயர்ந்த ஓவியம் சவூதி இளவரசரின் படகில்

உலகின் மிக விலை உயர்ந்த ஓவியம் சவூதி அரேபிய முடிக்குரிய இளவரசரின் சொகுசுப் படகில் இருப்பதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

லியோனார்டோ டா வின்ச்சி தீட்டிய அந்த சல்வட்டோர் முண்டி ஓவியம் 2017ஆம் ஆண்டு 450 மில்லியன் டொலருக்கு விற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்த ஓவியத்தின் இருப்பிடம் பற்றிய தகவல் ஏதும் தெரியாமல் இருந்தது.

அந்த மர்மத்தைத் தீர்க்கும் வகையில், லண்டனில் தளம்கொண்டுள்ள ஓவிய விற்பனையாளர் ஒருவர் அந்த ஓவியத்தின் இருப்பிடம் பற்றி தகவல் வெளியிட்டுள்ளார். சவூதி முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மானின் சொகுசுப் படகில் அது வைக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சல்வட்டோர் முண்டி ஓவியம் லியோனார்டோ டா வின்ச்சி கைவண்ணத்தில் உருவான மிகச் சிறந்த ஓவியங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.

இருளில் இருந்து இயேசுநாதர் தோன்றுவதைப் போன்று அதில் சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்த ஓவியம் தொடர்பான சர்ச்சையும் நிலவிவருகிறது. அதனை லியோனார்டோ டா வின்ச்சி வரையவில்லை என்றும், அவரது ஓவியப் பட்டறையில் இருந்த மற்றவர்கள் வரைந்தனர் என்றும் கூறப்படுகிறது.

Thu, 06/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை