ஆர்ஜன்டீனா, உருகுவே நாடுகள் மின் கோளாறால் இருளில் மூழ்கின

ஆர்ஜன்டீனா மற்றும் உருகுவேயில் ஏற்பட்ட பாரிய மின்சாரக் கோளாறு காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் இருளில் தவித்த நிலையில் அந்த நாடுகளில் தற்போது மீண்டு மின்சார விநியோகம் வழமைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது.

இது பற்றி முழு விசாரணை நடத்தப்படும் என்று ஆர்ஜன்டீன ஜனாதிபதி மோரிசியோ மக்ரி உறுதி அளித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மின்சார துண்டிப்பின் காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதோடு போக்குவரத்து சமிக்ஞை கம்பங்களும் செயலிழந்ததாக ஆர்ஜன்டீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரு நாடுகளுக்கும் மின்சாரம் விநியோகிக்கும் மின்சார விநியோக அமைப்பு செயலிழந்ததை அடுத்தே இந்த மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆர்ஜன்டீன மக்கள் வாக்களிப்புக்கு தயாராகி வரும் நிலையிலேயே இந்த நெருக்கடிக்கு முகம்கெடுத்துள்ளனர். இதனால் பல பிராந்தியங்களிலும் வாக்களிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பரகுவே மற்றும் சிலியின் சில பகுதிகளும் இதனால் பாதிக்கப்பட்டதாக அரச மின்சார நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் ஆற்றல்துறை செயலாளர், கஸ்டவோ லொபெடேகி இந்த மின் பழுதுக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என தெரிவித்துள்ளார். நாட்டில் சில பகுதிகளில் மின்சாரம் திரும்ப வந்துள்ளது என்று தெரிவித்த அவர், நாடு முழுவதும் மின்சாரம் வருவதற்கு நீண்ட நேரம் ஆகலாம் என தெரிவித்துள்ளார்.

ஆர்ஜன்டீன மற்றும் உருகுவேயின் மொத்த மக்கள் தொகை 48 மில்லியன் ஆகும்.

ஆர்ஜன்டீனாவின் சாண்டா பா, சான் லுௗயிஸ், பார்மோசா, லா ரோஜா, சுபுட், கர்டோபா மற்றும் மெண்டோசா ஆகிய மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என செய்திகள் தெரிவிக்கின்றன.

மின்வெட்டால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என ஆர்ஜன்டீனபாவின் நீர் விநியோக நிறுவனம் எச்சரித்துள்ளது.

Tue, 06/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை