மலையக வாக்காளர் பதிவுகளுக்கு அரசியல் பிரதிநிதிகள் உதவ வேண்டும்

கிராம சேவகர்களின் அசமந்தப்போக்கு திட்டமிட்ட செயலா?  

அரச சார்பற்ற நிறுவனங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

நாடு முழுவதும் வாக்காளர்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகையில் கிராம சேவகர்கள் மூலம் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படும் விண்ணப்பப்படிவங்களை உரிய முறையில் பூரணப்படுத்தி ஒப்படைக்க உள்ளுராட்சி சபைகளின் பிரதிநிதிகள்  தங்கள் தொகுதிகளில் இணைந்து செயற்பட வேண்டுமென பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். 

கிராம சேவகர்கள் மூலம் விண்ணப்பப்படிவங்கள் விநியோகிக்கப்பட்டாலும் உரிய முறையில், அவற்றில் பதிவுகள் நடைபெறவில்லை. கிராமசேவகர்கள் இதனை முறையாக செய்யவில்லை. இது ஒரு திட்டமிட்ட செயலா? என்றும் சந்தேகிக்கத் தோன்றுகிறது. இதனால் எதிர்காலத்தில் மலையகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. எனவே வாக்காளர்களைப் பதிவு செய்யும் விடயத்தில் உள்ளூராட்சி உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

ஏனைய அரசியல் பிரமுகர்களும் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தல் அவசியம். இந்த விடயம் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் மேலும் தெரிவித்தார். 

பதுளை மாவட்டம் பண்டாரவளை, நாயபெத்த தோட்டம் சூரியபுரத்திற்கான பிரதான வீதியை தனது பன்முகப்படுத்தபட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் அபிவிருத்தி செய்து மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர். 

பெருந்தோட்டங்களில் கணிசமான வாக்காளர்கள் இருந்தும் உரிய நேரத்தில் அவர்கள் தங்களைப் பதிவு செய்வதில்லை.இதனால் வாக்காளர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்படுகிறது.  இதற்கு பல்வேறு காரணங்கள் கூறபட்டாலும். கிராம சேவகர்கள் இதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மலையகத்தில் வாக்காளர்களின் பதிவு முறையாக இடம்பெற வேண்டுமானால் அரசியல் பிரதிநிதிகளும் கிராம சேவகர்களுடன் இணைந்து செயற்பட வேண்டும்.

நாட்டிலுள்ள அனைவரும் வாக்குரிமையை பெற்றிருக்க வேண்டும். வாக்குருமையே சகல வரப்பிரசாதங்களும் கிடைக்கப் பாலமாக இருக்கின்றது. கிராம சேவகரின் சான்றிதழ் பத்திரம் ஒன்று வேண்டுமானாலும் கூட வாக்காளர் பதிவு முக்கியம். மலையத்தில் வாக்காளர்களின் பதிவுகள் அதிகரிக்கும் போதே மலையகத்தில் அரசியலில் மக்கள் பிரதிநிதிகள் அதிகரிக்க முடியும். மலையக மக்களின் சனத்தொகை பரம்பலுக்கு அமைய 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும் தற்போது 09 பேர் மாத்திரமே உள்ளனர். மிகுதியான 06 பேரை மற்றவர்களுக்கு தாரைவார்த்துள்ளோம்.  இது இனியும் நடைபெறக் கூடாது என்றார்.

Fri, 06/14/2019 - 07:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை