மக்கள் வங்கியை தனியார் மயப்படுத்த இடமளியோம்

ஜே.வி.பி அறிவிப்பு

மக்கள் வங்கியை தனியார் மயப்படுத்தும் நோக்கில் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும் அரசாங்கமும் பல்வேறு உபாயமார்க்கங்களை வகுத்துவருவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

நாட்டின் நிதித்துறைக்கும் திறைசேரிக்கும் பாரிய பங்களிப்பை வழங்கி வரும் மக்கள் வங்கியை தனியார்மயப்படுத்த இடமளிக்க மாட்டோம் என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது. ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

தேசிய சொத்துகளை விற்பனை செய்ய தற்போதைய அரசாங்கம் விசேட பொறிமுறையொன்றை பின்பற்றுகிறது. குறித்த நிறுவனங்களில் தொழில்புரியும் ஊழியர் படைக்குத் தெரியாமல் அந்தச் செயற்பாட்டை செய்கின்றனர். தேசிய சொத்துக்க​ைள தாரைவார்க்கும் செயற்பாடு எவ்வாறு துரிதமாகவும் சூட்சமமாகவும் நடைபெறுகிறதென கடந்த மாதம் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் வழங்கியதிலிருந்து தெரிந்துக்கொள்ள முடியும். அதேபோன்று செவனகல மற்றும் பெலவத்தை சீனித் தொழிற்சாலைகளையும் விற்பனை செய்துள்ளனர்.

தற்போது மக்கள் வங்கியை தனியார்மயப்படுத்தும் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளனர். எமது நாட்டின் நிதிக் கட்டமைப்பை பலப்படுத்தும் ஒரு வங்கியே மக்கள் வங்கி. அரசாங்கத்தின் நிதிக் கட்டமைப்புகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததென 1997ஆம் ஆண்டு ஆசியாவிலும் 2008 அமெரிக்காவை மையமாக கொண்டு உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் மூலம் அறிந்துக்கொள்ள முடியும்.

ஆசியாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளின் போது வளர்ச்சியடைந்து வந்துக்கொண்டிருந்த இந்தியா மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளின் பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சிகண்டது. 2008ஆம் ஆண்டு பல உலக நாடுகள் பொருளாதார நெருக்கடியை சந்தித்தமையை நாம் கண்டோம். ஆனால், அரச நிதிக் கட்டமைப்பு பலமாகவிருந்த நாடுகள் அன்றைய பொருளாதார நெருக்கடிகளுக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்திருந்தன.அரச வங்கிகள் நாட்டின் நிதிக் கட்டமைப்புக்கு அப்பால் நாட்டின் அனைத்து பொருளாதார துறைகளிலும் தாக்கம் செலுத்துகின்றன. பொருளாதாரத்தை பாதுகாக்க முப்படைகளை அனுப்ப முடியாது.

அதற்குத் தேவையானது, அரச நிதிக் கட்டமைப்பை போன்று அரச நிதிக்கொள்கைகளை பலப்படுத்துவதாகும். கடந்த 15 வருடங்களாக ஆட்சிபுரியும் அரசுகள் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவுகளுக்கு அமைய அரச வங்கிகளை தனியார்மயப்படுத்த முயற்சித்துள்ளன.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Mon, 06/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை