உடல் சமநிலை பேணும் சிறுநீரகங்கள்

மனிதனின் முதுகெலும்பு பகுதியில் வலது இடது பக்கங்களில் அவரை விதை வடிவில் அமைந்துள்ள உறுப்புகள் தான் சிறுநீரகங்களாகும். இந்த சிறுநீரகத்தின் முக்கிய தொழில்  நீரில் கரையக்கூடிய கழிவுப்பொருட்களை குருதியிலிருந்து வடித்தெடுத்து வெளியேற்றுதலாகும். இந்த செயல்பாடு சிறிது சிறிதாக குறைந்து நீண்ட நாட்களுக்குப்பின் சிறுநீரகத்தின் முழுமையான செயல்திறனும் குறைவடைwவதே நாட்பட்ட சிறுநீரகக்கோளாறு எனப்படுகின்றது. 

சிறுநீரகமானது, குருதியில் அமில, -கார நிலையை சமப்படுத்துதல், குருதி அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், குருதியில் உள்ள யூரியா உள்ளிட்ட கழிவுப்பொருட்களை வெளியேற்றுதல் என்பவற்றை மேற்கொள்கின்றது. அதாவது உடலில் தினமும் உருவாகும் நச்சுப்பொருட்களை வடி கட்டி கழிவுகளை சிறுநீரின் ஊடாக வெளியேற்றுதலே இங்கு இடம்பெறுகின்றது. அளவுக்கு அதிகமான உப்பு வகைகளையும், தாதுகளையும் கூட இது பிரிக்கின்றது. அத்தோடு சில ஹோர்மோன்களையும் இந்த சிறுநீரகம் உற்பத்திச் செய்கின்றது.  

என்றாலும் இலங்கை, இந்தியா போன்ற பல நாடுகளில் நாட்பட்ட சிறுநீரகப் பாதிப்பு அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. இது பெரும் ஆரோக்கியப் பிரச்சினையாக வளர்ச்சி பெற்றுள்ளன. இதன் காரணத்தினால் இப்பாதிப்பு தொடர்பில் பல மட்டங்களிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் சிறுநீரகத்தின் செயற்பாடுகளில் பாதிப்புக்கள் ஏற்படும் போது சிறுநீரகங்கள் செயலிழந்து கழிவுகள் வெளியேறாமல் உடலில் தேங்கும். இதன் விளைவாக சிறுநீரகங்களின் செயற்பாடுகள் பாதிப்படையும்.  

சிறுநீரகங்கள் இவ்வாறு பாதிப்படைவதுற்கு பல காரணிகள் துணைபுரிகின்றன. குறிப்பாக தேவையான அளவில் நீர் அருந்தாமை, உணவில் உப்பை அதிகளவில் சேர்த்துக்கொள்ளுதல், அதிக வீரியம் கொண்ட மாத்திரைகளை நீண்ட நாட்களாக தொடர்ந்து பாவித்தல், மருத்துவரின் ஆலோசனையின்றி தேவையற்ற மருந்துகளை உட்கொள்ளுதல், ஸ்டீரொய்ட் மருந்துகளை அதிகளவு உட்கொள்ளுதல், மதுப்பாவனை மற்றும் புகைப்பிடித்தல் பழக்கம், நீரிழிவு, உயர் குருதியழுத்தம், அதற்கான மருந்துகளை அதிக நாட்கள் தொடர்ந்து உட்கொள்ளுதல், சிறுநீர்ப்பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படல், சிறு நீரகக்கற்களை கொண்டிருத்தல், சிறுநீரக கட்டிகள், சிறுநீரகத்தின் வடிகட்டுதல், செயல்திறன் குறைவடைதல், சிறுநீரகக் காசநோய், இதயக் கோளாறு, உடல் பருமன், சிறுநீரகம் பாதிக்கப்பட்ட மரபணு குறைபாடு உள்ளவர்கள், ஹோர்மோன் குறைபாடு உள்ளவர்கள், மூட்டுவாதம் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் தேவையற்ற மருந்துகளை அதிகம் பாவித்தல் உள்ளிட்ட பல தரப்பட்ட காரணங்களாலும் இந்நாட்பட்ட சிறுநீரகக் கோளாறு ஏற்படுவதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால் இக்காரணிகளையும் செயற்பாடுகளையும் சீர்செய்து கொள்வதன் மூலம் நாட்பட்ட சிறுநீரகக் கோளாறுகளை தவிர்த்துக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.  

இவ்வகை சிறுநீரக நோயின் முதல் அறிகுறி தொடர்பில் சிறுநீர் வெளியேறும் அளவிலும், அது வெளியேறும் விதத்திலும் ஏற்படும் மாற்றங்களை கவனிக்க வேண்டும். சிறுநீர் கழிக்கும் அளவு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். சிறுநீரில் புரதம் அல்லது குருதி காணப்படல், குருதியில் ஹீமோகுளோபின் அளவு குறைதல், கைகள், கால்கள், முகம் போன்றவற்றில் வீக்கம் உண்டாதல் என்பனவும் வெளிப்படும்.  

சிறுநீரகத்தின் செயல்திறன் குறைவடைவதால் உடலில் நீர்த்தன்மை அதிகரித்து உடலில் வீக்கம் ஏற்படும். குருதியில் ஹீமோகுளோபின் அளவு குறைவடையும் போது மூளைக்குச் செல்லும் ஒட்சிசனின் அளவில் வீழ்ச்சி அடையும். இதன் விளைவாக உடலில் மயக்க உணர்வு ஏற்படும்.  

இவை இவ்வாறிருக்க, குருதியில் காணப்படும் கழிவுப்பொருட்கள் அதிகரித்து செல்வதன் விளைவாக குமட்டலும் வாந்தியும் ஏற்படும், இரத்த அழுத்தம் அதிகரித்துக் காணப்படும். தூக்கமின்மை உண்டாகும், இரவில் அடிக்கடி சிறுநீர் கழிதல் ஏற்படும், நுரையீரலில் நீர்மம் சேரும், அதன் விளைவாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும், இரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகரிக்கும் போது வெளிவிடும் மூச்சுக்காற்றில் கெட்ட வாடையும் வீசும்.  

மேலும் இரத்தத்தில் யூரியா உள்ளிட்ட கழிவுகள் அதிகரிப்பதன் விளைவாக சருமத்தில் தீவிர அரிப்புகளும் ஏற்படும். சிறுநீரகம் சுரக்கும் ஹோர்மோன் குருதியில் செங்குருதி சிறுதுணிக்கைகள் ஒட்சிசனைக் கொண்டு செல்ல உதவும். இந்த ஹோர்மோன் அளவு குறையுமாயின் செங்குருதி சிறுதுணிக்கைகளின் அளவும் குறைந்து குருதிச்சோகை ஏற்படும்.  

அதன் காரணத்தினால் சிறுநீரகப் பாதிப்புக்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். அது மிகவும் இன்றியமையாததாகும். இல்லாவிடில் நாட்பட்ட சிறுநீரகப் பாதிப்புக்கு முகம் கொடுக்க நேரிடுவதோடு அதனைக் குணப்படுத்துவதும் சிரமமான காரியமாக அமைந்துவிடும்.  

எனினும், சிறுநீரகக் கோளாறு காரணமாக சிறுநீரகத்தின் பயன்பாட்டை இழக்கும் நோயாளர்களுக்கு தான் செயற்கை முறையில் இரத்த சுத்திகரிப்பு (டயலிசிஸ்) செய்யப்படுகின்றது. குறிப்பாக நெடுநாட்பட்ட சிறுநீரகக் கோளாறு தீவிரநிலையில் உள்ளவர்களுக்கு தான் இந்த டயலிசிஸ் இடம்பெறுகின்றது.இதனைச் செய்வது இன்றியமையாததாகும்  

ஏனெனில் உடல் நலனைப் பராமரிப்பதில் சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆரோக்கியமாக இருக்கும் போது சிறு நீரகங்கள் உடலின் நீர் மற்றும் கனிமங்களான சோடியம், பொற்றாசியம், குளோரைட், கல்சியம், பொஸ்பரசு, மக்னீசியம் போன்றவற்றை சமநிலைப்படுத்துகின்றது.  

அதன் காரணத்தினால் நாட்பட்ட சிறுநீரகக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளவர்கள் குறிப்பாக உணவில் உப்பினை தவிர்த்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவில் மாத்திரம் நீர் பருக வேண்டும். குறிப்பாக தாகம் ஏற்பட்டால் மாத்திரமே நீர் பருக வேண்டும்.

நீர்ச்சத்துள்ள மரக்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரும்புச்சத்துள்ள உணவுப்பொருட்களை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அத்தோடு உணவில் சோடியத்தின் அளவு குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் நாள்பட்ட தீவிர சிறுநீரகநோய்க்கு உள்ளாகியுள்ளவர்களின் சிறுநீரகங்களால் சோடியத்தை வடிகட்ட முடியாத நிலை காணப்படும். குறிப்பாக உணவில் உப்பைச் சேர்த்துக் கொள்வதை முழுமையாக தவிர்த்துக்கொள்ள வேண்டும். அத்தோடு உப்புச்சத்துள்ள உணவுபொருள்களையும் மரக்கறிகளையும் கூட தவிர்ப்பதும் நல்லது.  

என்றாலும் மருத்துவ ஆலோசனைகளுடன் உணவு மற்றும் பானங்களை உட்கொள்வதே மிகவும் பயன்மிக்கதாக இருக்கும். 

Sat, 06/22/2019 - 08:10


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக