ஈரானின் யுரேனிய செறிவூட்டல் அதிகரிப்பு

ஈரான் தனது யுரேனியத்தை செறிவூட்ட ஆரம்பித்திருப்பதை உலக அணுசக்தி கண்காணிப்பகத்தின் தலைவர் உறுதி செய்துள்ளார்.

எனினும் 2015 இன் சர்வதேச உடன்படிக்கையின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட அளவை அவர்கள் எப்போது எட்டுவார்கள் என்பது தெளிவின்றி இருப்பதாக சர்வதேச அணுசக்தி முகாமை தலைவர் யுகியா அமனோ கூறினார்.

அமெரிக்காவின் தடைகள் மீண்டும் கொண்டுவரப்பட்டதற்கு பதில் நடவடிக்கையாக உடன்பாட்டின் சில கடப்பாடுகளை இடைநிறுத்துவதாக ஈரான் கடந்த மாதம் அறிவித்திருந்தது.

எனினும் ஈரான் அணுசக்தி தொடர்பான தற்போதைய பதற்றத்திற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வொன்றை காண வேண்டும் என்று அமனோ வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் பொருளாதாரப் போரை நிறுத்தினால் மாத்திரமே பதற்றத்தை தணிக்க முடியும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் முஹமது ஜவாத் சாரிப் குறிப்பிட்டுள்ளார்.

“அவ்வாறான போர்களை ஏற்படுத்துபவர்கள் தொடர்ந்து பாதுகாப்பாக இருப்பதற்கு எதிர்்பார்க்க முடியாது” என்று ஈரானுக்கு வருகை தந்திருக்கும் ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஹெய்கோ மாஸ் உடன் டெஹ்ரானில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சாரிப் குறிப்பிட்டார்.

பிராந்தியம் மோசமான தீவிரத்தன்மை மற்றும் பெரும் வெடிப்பொன்று ஏற்படும் நிலைக்கு முகம்கொடுத்திருப்பதாகவும் அது அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் இராணுவ மோதல் ஒன்றுக்கு இட்டுச் செல்லும் என்றும் மாஸ் இந்த ஊடக சந்திப்பில் எச்சரித்தார்.

ஈரானுடனான அனுசக்தி உடன்படிக்கையில் இருந்து கடந்த ஆண்டு தன்னிச்சையாக வெளியேறிய அமெரிக்கா ஈரான் மீதான பொருளாதார தடைகளை மீண்டும் கொண்டுவந்தது.

இந்நிலையில் ஈரானின் எண்ணெயை தொடர்ந்து வாங்கும் நாடுகளுக்கு வழங்கி இருந்த தடை விலக்கையும் கடந்த மாதம் அமெரிக்கா அகற்றியது. ஈரான் எண்ணெய் ஏற்றுமதியை முழுமையாக தடுக்கும் முயற்சியாகவே அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்தது.

இதற்கு ஒருநாள் கழித்து சர்வதேச உடன்படிக்கையில் கொண்டுவரப்பட்ட சில கட்டுப்பாடுகளை வாபஸ் பெறுவதாக ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரூஹானி அறிவித்திருந்தார்.

அணுசக்தி ஒப்பந்தம் மூலம், செறிவூட்டப்பட்டு யுரேனியத்தில் அதிகமாக இருப்பவற்றை சேமித்து கொள்ளாமல் ஈரான் வெளிநாடுகளுக்கு விற்க நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. இதனை ஈரான் இடைநிறுத்தியுள்ளது.

அணு மின்சார உற்பத்தி செய்யும்போது கிடைக்கின்ற செறிவுூட்டிய யுரேனியத்தை சேமித்து வைத்துகொண்டால் ஈரான் அணு ஆயுதங்களை செய்வதற்கு பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு 300 கி.கி செறிவூட்டப்பட்ட யுரேனியம் மற்றும் 130 தொன்கள் கன நீரையே ஈரானுக்கு செமித்து வைக்க சர்வதேச உடன்படிக்கையில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஈரான் தனது யுரேனிய செறிவூட்டல் உற்பத்தி எண்ணிக்கையை அதிகரித்திருப்பதாக அணுசக்தி கண்காணிப்புத் தலைவர் கடந்த திங்கட்கிழமை குறிப்பிட்டுள்ளார். ஆனால் அது எவ்வளவு என்பதை அவர் கூற மறுத்துள்ளார்.

Wed, 06/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை