முஸ்லிம் சமூகத்திற்குள்ளேயே புல்லுருவிகள் உள்ளனர்

முஸ்லிம் சமூகத்திற்குள்ளேயே புல்லுருவிகள் உள்ளனர்-Jaffna MC Member MMM Nifahir-Condemn Terrorism

இலங்கையில் தற்போது உருவாகியுள்ள ஐ.எஸ்.ஐ. எஸ் தீவிரவாதப் பிரச்சினைக்கு மத்தியில் எங்களுடைய சமூகத்திலுள்ள சில புல்லுருவிகள்   வேறு பிரச்சினைகளுக்காக உலமாக்களையும் எம்மவர்களையும் தேவையற்ற வகையில் அவதூறுகளை கூறி அவர்களைச் சிறைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக யாழ். மாநகரசபை உறுப்பினர் எம்.எம்.எம். நிபாஹிர் தெரிவித்தார்.

இவ்வாறான செயற்பாடுகளை தயவு செய்து   உடனடியாக நிறுத்துமாறு அவர் தெரிவித்தார்.

முஸ்லிம் சமூகத்திற்குள்ளேயே புல்லுருவிகள் உள்ளனர்-Jaffna MC Member MMM Nifahir-Condemn Terrorism

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக  வெள்ளிக்கிழமை (31)   யாழ்  பள்ளிவாசல்களின் ஏற்பாட்டில்   பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைத் திருநாட்டில் பல்வேறு சமூகங்கள் அமைதியாகவும், சந்தோசமாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஒரு சில விஷமிகள் இந்த நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக தற்போது முஸ்லிம் மக்கள் அச்சத்தில் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

நாங்கள் இலங்கையில் வாழக் கூடிய முஸ்லிம் சமூகத்தவர்கள் என்ற வகையில் எமது சமூகம் எந்தவொரு சமூகத்திற்கும் துரோகமிழைக்கும் சமூகமல்ல. அனைவரும் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் வாழ வேண்டுமென்ற சிந்தனையுடனேயே எமது சமூகம் வாழ்ந்து வருகின்றது. ஆனால், தற்போதைய நிலைமை வருத்ததிற்குரியது.

இந்தநாட்டில் எந்தவொரு அரசாங்கம் வந்தாலும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடியவர்களாகவும், அரசாங்கத்தின் சட்ட திட்டங்களை மதித்து வாழக் கூடியவர்களாகவும் நாம் வாழ்ந்து வந்துள்ளோம்.

அவலநிலையை ஏற்படுத்திய ஐ. எஸ். தீவிரவாதத்திற்கு எதிர்ப்பினைத் தெரிவிக்கும் வகையிலும், இவ்வாறான தீவிரவாதத்தால் இங்கு இடம்பெறும் பயங்கரவாதச் செயற்பாட்டிற்கு எமது கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையிலும் இன்றைய ஆர்ப்பாட்டத்தை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். இந்த நாட்டில் இடம்பெறும் அனைத்து பயங்கரவாதச் செயல்களுக்கும் நாங்கள் முற்றுமுழுதாக எதிரானவர்கள் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

(பாறுக் ஷிஹான் - புங்குடுதீவு குறுப் நிருபர்)

Sun, 06/02/2019 - 15:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை