வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்தை புனரமைக்கதேரர்கள் உடன்பாடு

அமைச்சர் மனோ தலைமையில் நடந்த கூட்டத்தில் இணக்கம்

வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயமிருந்த இடத்தில் பௌத்த விகாரை கட்ட மாட்டோம் எனவும், தமிழ் பௌத்த வரலாறு இங்கு இருப்பதை ஏற்றுக்கொள்கிறோம் எனவும் கன்னியா விகாரை தேரர்கள் உடன்பட்டுள்ளதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.

புராதன சிதைவுகளுக்கு சேதம் ஏற்படாத முறையில் கன்னியா வளவுக்குள் வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயம் அமைக்கவும், வெந்நீர் ஊற்று

சிவன் ஆலயத்தையும் புனரமைக்கவும் உடன்பாடு காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

நேற்று திங்கட்கிழமை திருக்கோணமலை கன்னியா பிரதேசத்திற்கு விஜயம் செய்த அமைச்சர், பௌத்த பிக்குகளுடனான கலந்துரையாடலின் பின்னர் கன்னியா வெந்நீர் ஊற்று வளவுக்குச் சென்று நேரடியாக ஸ்தலத்தை பார்வையிட்டதுடன், சிவன்கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்ட பூஜையிலும் கலந்துகொண்டார்.

அமைச்சருடன், பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், சிவஞானம் சிறிதரன் மற்றும் சீனித்தம்பி யோகஸ்வரன் உட்பட அமைச்சின் அதிகாரிகளும் சென்றிருந்தனர்.

அடுத்தகட்ட கலந்துரையாடலை ஜனாதிபதி, பிரதமர், இந்து, பௌத்த விவகார அமைச்சர்கள் கலந்துக்கொள்ளும் வகையில் கொழும்பில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கன்னியா விநாயகர், சிவன் ஆலய கட்டுமானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய அலுவல்கள் அமைச்சு வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tue, 06/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை