உயர்பதவி வகிப்போர் நிதானமாக கருத்துகளை வெளியிட வேண்டும்

அட்டாளைச்சேனை தினகரன், பாலமுனை கிழக்கு தினகரன் நிருபர்கள்

மக்களை திருப்திப்படுத்துவதற்காக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்ட கருத்துக்களால் பல்வேறு பிரச்சினைகள் எழக் காரணமாக அமைந்துள்ளது. இக்கருத்தினை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். இவ்வாறான கருத்துக்களை வெளியிடாமல் இருப்பதே சிறந்து என முன்னாள் சுகாதாரத் துறை இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்தார்.

ஒலுவில் மக்கள் எதிர்நோக்கி வரும் கடலரிப்பு மற்றும் மீனவர் பிரச்சினைகளை எழுத்துருவாக்கி கலைஞர் ஒலுவில் ஜே.வஹாப்தீன் எழுதிய் 'தோறாப்பாடு' சமூக நாவல் வெளியீட்டு விழா சனிக்கிழமை (15) ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அக்கரைப்பற்று கல்வி வலய தமிழ்த்துறை உதவிக் கல்விப் பணிப்பாளர் ஹனீபா இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், துறைசார் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின்போது அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

பொறுப்பு வாய்ந்த பதவிகளில் உள்ளவர்களும், பொறுப்புக் கூறவேண்டிய அந்தஸ்த்துக்களில் உள்ளவர்களும் கருத்துக்களை வெளியிடுகின்றபோது நன்கு சிந்தித்து நிதானத்துடனும் பொறுப்புடனும் கருத்துக்களை வெளியிட வேண்டும்.

முஸ்லிம் மக்களைப் பாதுகாப்பது தொடர்பிலும் சிறுபான்மைச் சமூகத்தின் உரிமைகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் நாம் முனைப்புடன் செயற்படுகின்றபோது சிலர் வெளியிடுகின்ற பொறுப்பற்ற கருத்துக்கள் எரிகின்ற தீயில் மேலும் எண்ணெய் ஊற்றுவதாய் அமைந்து விடுகின்றது.

துறைமுக நிர்மாணத்தினைத் தொடர்ந்து இடம்பெற்ற இழப்புக்கள் இது தொடர்பான மக்களுக்கு உதவும் செயற்பாடுகள் போன்றவற்றில் நாம் முழு மூச்சுடன் செயற்பட்டு வருகின்றோம்.

இது தொடர்பில் எழுத்தாளர் ஜே.வஹாப்தீன் பல்வேறு தரப்பினரையும் தொடர்புபடுத்தி எழுத்துருவில் நாவலொன்றை ஆக்கியிருக்கின்றார். நிச்சயம் வெளிக்கொணரப்பட வேண்டிய பல்வேறு கருத்துக்கள் இந்நூலில் அமையப் பெற்றுள்ளது என்றார்.

Tue, 06/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை